2012-03-07 15:30:27

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மார்ச் 07, 2012. உரோம் நகரம் குளிர் காலத்திலிருந்து ஓரளவு விடுபட்டு கோடை காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்த நாட்களில், மிதமான சூரிய ஒளியும் இதமான வெப்பமும் சுகமாக இருப்பதால் உரோம் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தட்ப வெப்ப நிலையும் துணை நிற்கும் இத்தகையதொரு சூழலில், தூய பேதுரு பேராலய வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, இயேசுவின் செபம் குறித்த தன் மறைபோதகத்தின் நிறைவுரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இயேசுவின் செபம் குறித்த மறைபோதகத்தொடரின் நிறைவாக இன்று, இறைவனுடன் நாம் கொள்ளும் உறவில் மௌனத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாட விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் செபத்திலும், குறிப்பாக அவரின் சிலுவை அனுபவத்தில், வார்த்தையும் மௌனமும் தொடர்ந்து ஒன்றையொன்று இடைமறித்து ஒன்றுக்குள் ஒன்றாய் வருவதைக் காண்கிறோம். சிலுவையில், மரணத்தறுவாயில் இயேசு கொண்ட மௌனமே இறைத்தந்தைக்கு அவர் தந்த இறுதி வார்த்தை. அதுவே அவரின் உன்னத செபம். இறைவனின் வார்த்தைக்கு நாம் செவிமடுக்க வேண்டுமெனில் நம் அகம் புறம் இரண்டிலும் மௌன விதையிட்டு வளர்க்க வேண்டும். அப்போது, இறைவனின் வார்த்தைகள் நம் இதயத்தில் எதிரொலித்து நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். நம் துன்பகரமான வேளைகளில் இறைவன் தன் மௌனத்தின் வழி நம்மோடு பேசுகிறார் என்பதை இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். நம் துன்பத்தில் இறைவனின் மௌனம், நம் விசுவாசத்தை ஆழப்படுத்தவும், அவரின் வாக்குறுதிகளில் நம்பிக்கைக் கொள்ளவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவே நம் உயரிய செப ஆசிரியர். வானகத்தந்தையின் அன்புக்குரிய குழந்தைகளாக முழு நம்பிக்கையுடன் அவரோடு உரையாட இயேசுவின் செபத்திலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். இறைவனின் பல்வேறு கொடைகளைக் கண்டுகொள்ளவும், அவரின் விருப்பத்திற்குப் பணியவும், குழந்தைகளுக்குரிய இந்த உரையாடலில் நாம் கற்பிக்கப்படுகிறோம். இதுவே நம் வாழ்வுக்கான அர்த்தத்தையும் வழியையும் தருகிறது.

இன்றைய மறைபோதகத்தின் துவக்கத்தில் திருத்தந்தை, அர்மீனிய கத்தோலிக்கத் திருஅவையின் ஆயர்கள் மாநாட்டையொட்டி உரோம் நகர் வந்திருக்கும் அத்திருஅவைத் தலைவர்களை வாழ்த்தினார். குறிப்பாக, அர்மீனிய கத்தோலிக்க திருஅவையின் Cilicia முதுபெரும் தலைவர் வணக்கத்துக்குரிய 19ம் Nerses Bedros Tarmouniஐ வரவேற்று வாழ்த்தினார் பாப்பிறை. தூய பேதுரு பேராலய வளாகத்தில் நடந்த பொது மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.