2012-03-07 15:56:48

கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் - பத்திரிக்கைச் சுதந்திரம் என்றால், எதையும் சொல்வதற்குத் தரப்பட்ட சுதந்திரம் என்று பொருள் அல்ல


மார்ச்,07,2012. சமுதாய மாற்றங்களை உருவாக்க ஊடகங்கள் ஆற்றும் பணி இன்றியமையாதது என்பதால், ஊடகங்களில் நன்னெறி கோட்பாடுகளை நிலைநிறுத்துவது மிகவும் அவசியம் என்று கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இதழியலை மையப்படுத்தி மும்பை நகரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் கிரேசியஸ், பத்திரிக்கைச் சுதந்திரம் என்றால், எதையும் சொல்வதற்குத் தரப்பட்ட சுதந்திரம் என்று பொருள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
உலகில் உள்ள ஊடகங்களின் சக்தியை உணர்ந்து, கடவுளின் அன்பை விளக்கும் கருவிகளாக அவற்றைப் பயன்படுத்திய அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களை எடுத்துக்காட்டாகக் கூறிய கர்தினால் கிரேசியஸ், நன்மை விளைவிக்கும் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதே பத்திரிகைத் துறையில் பணிபுரிவோரின் முக்கியக் கடமை என்று கூறினார்.
இந்திய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு பத்திரிக்கைகள் மிக முக்கிய பணி ஆற்றவேண்டும் என்று கூறிய அனுபவம் மிக்க செய்திதொடர்பாளர் B.G. Verghese, இந்த முன்னேற்றத்தைச் சரியான பாதையில் எடுத்துச் செல்ல பத்திரிக்கைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.