2012-03-06 15:22:03

திருப்பீடத்தின் சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவினரும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயப் பாடகர் குழுவினரும் முதன் முறையாக இணைந்து பாட உள்ளனர்


மார்ச்,06,2012. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தின் உலகப்புகழ் வாய்ந்த பாடகர் குழுவை உரோம் நகரின் புனித பேதுரு பேராலய விழாவில் வந்து பாடும்படி அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.
ஜூன் மாதம் 29ம் தேதி புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாக் கொண்டாட்டத் திருப்பலியின்போது திருப்பீடத்தின் சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவுடன் இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயக்குழுவும் இணைந்து பாடும்.
திருப்பீடப் பாடகர்குழு தன் 500 வருட வரலாற்றில் பிறிதொரு பாடகர் குழுவோடு இணைந்து பாட உள்ளது இதுவே முதன்முறையாகும்.
ஜூன் மாதம் 28ம் தேதி மாலை உரோம் நகர் புனித பவுல் பேராலயத்தின் திருவழிபாட்டுச் சடங்கிலும், 29ம் தேதி காலை உரோமையின் புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்ற உள்ள திருப்பலியிலும் இவ்விரு பாடகர் குழுக்களும் இணைந்து பாடும்.
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தைத் தரிசித்ததைத் தொடர்ந்து, இரு கிறிஸ்தவ சபைகளிடையே தங்கள் கலாச்சார மற்றும் திருவழிபாட்டுக் கொடைகளைப் பகிர்ந்துகொள்வது குறித்த நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.