2012-03-06 15:22:33

இந்தியாவில் சீரோமலபார் ரீதிக்கென புதிய மறைமாவட்டம்


மார்ச்,06,2012. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் சீரோ மலபார் ரீதியின் ஃபரிதாபாத் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன் புதிய ஆயராக சீரோமலபார் ரீதி குரு குரியாகோஸ் பரணிகுளங்கராவை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இது நாள் வரை ஜெர்மனிக்கான திருப்பீடத்தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்த குரு பரணிகுளங்கரா, 1959ம் ஆண்டு எர்ணாகுளம் அங்கமலி உயர்மறைமாவட்டத்தின் கரிப்பசேரி எனுமிடத்தில் பிறந்து 1983ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டவர்.
உரோம் நகரில் உயர்கல்வி பயின்ற இவர், முதலில் நியூ யார்க்கிலுள்ள ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப்பார்வையாளர் அலுவலகத்திலும், பின்னர் ஜெர்மனிக்கான திருப்பீடத்தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார். ஃபரிதாபாத் ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், பேராயர் என்ற பட்டத்துடன் திருநிலைப்படுத்தப்படுவார்.
சீரோமலபார் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள ஃபரிதாபாத் மறைமாவட்டம், 23 பங்குதளங்களையும், பல மேய்ப்புபணி மையங்களையும் கொண்டு 44 குருக்களுடன் இயங்க உள்ளது. இப்புதிய மறைமாவட்டத்தில் கத்தோலிக்க திருஅவை 3 பள்ளிகளையும் 4 மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது.
ஐந்து ஆண் துறவு சபைகளைச் சார்ந்தவர்களும் எட்டு பெண்துறவு சபைகளைச் சார்ந்தவர்களும் இங்கு பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.