2012-03-05 15:20:39

அணுஉலைகளின் ஆபத்துக்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி மணிலாவில் ஆரம்பம்


மார்ச்,05,2012. ஜப்பான் நாட்டின் Fukushimaவில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி மற்றும் இவற்றைத் தொடர்ந்த அணுக்கதிர் வீச்சு ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி இத்திங்களன்று பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் திறக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளாவிய முறையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் Greenpeace என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியின் மூலம், அணுசக்தி பயன்பாட்டால் இவ்வுலகம் தொடர்ந்து சந்தித்துவரும் ஆபத்துக்களை இந்நிறுவனம் விளக்க முயல்கிறது.
அணுசக்திக்கு மாற்றாக பல்வேறு சக்திகளை உலக அரசுகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்தக் கண்காட்சியைத் தாங்கள் உருவாகியுள்ளதாக, உலக அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் Robert Knoth மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பதில் புகழ்பெற்ற Antoinette de Jong கூறினர்.
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல நாடுகளில் அடிக்கடி அணுக்கசிவுகளும், அணு உலைகளால் ஆபத்துக்களும் நிகழ்ந்து வந்தபோதிலும், இன்னும் உலகின் பல அரசுகள் அணுசக்தியை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது உலகத்திற்கு நல்லதல்ல என்று Greenpeace அமைப்பின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளர் Francis De la Cruz கூறினார்.
"நிழல்தேசங்கள்" (“Shadowlands”) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, அணுமின் நிலையங்களை உருவாக்கும் திட்டங்களைத் தீட்டிவரும் பல நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கையாகத் திகழும் என்று தாங்கள் நம்புவதாக இக்கண்காட்சியின் அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.