2012-03-03 15:43:46

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உலகில் வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உள்ளன என்பதை புவியியலில் படித்திருக்கிறோம். இவ்வுலகின் மூன்றாவது துருவம் என்று ஓரிடம் அழைக்கப்படுகிறது. அதுதான் உலகிலேயே மிக உயர்ந்த இடம் என்று கருதப்படும் எவரெஸ்ட் மலைச் சிகரம். கடல் மட்டத்திலிருந்து இச்சிகரம் 8,848 மீட்டர், (29,029 அடி) உயரமானது. உலகின் வடதுருவத்தை 1909ம் ஆண்டும், தென்துருவத்தை 1911ம் ஆண்டும் மனிதர்கள் சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த Edmund Hillaryம் நேபாள இந்தியரான Tenzing Norgayம் இந்தச் சாதனையை முதல் முறை செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, இதுவரை இச்சிகரத்தை 3142 வீரர்கள் எட்டிப்பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. எவரெஸ்ட் மலைச்சிகரம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு மலைச்சிகரங்கள் எட்டுவதற்கு மிகக் கடினமானவை என்பதை அறிந்தும், அச்சிகரங்களை அடைய ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் முயன்று வருகிறார்கள். மலைச் சிகரங்கள் இப்படி ஓர் ஆர்வத்தை மக்கள் மனங்களில் தூண்டி வருகின்றன. இந்த முயற்சிகளில் பல வெற்றி அடைவதில்லை, பல மரணங்களில் முடிந்துள்ளன. இருந்தாலும், மலைச் சிகரங்கள் மீது மனித மனங்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு, தணியாத ஓர் ஈர்ப்பு.
மலைச்சிகரங்கள்... உடலிலும் மனதிலும் மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். உலகின் இரைச்சல் இன்றி மலை முகடுகளில் நிலவும் அமைதி, இயற்கையின் அழகிய ஒலி, மலைச் சிகரங்களில் வீசும் தூய்மையான காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை நம்மில் புத்துணர்வைத் தூண்டும். அமைதி, தூய்மை, புத்துணர்வு என்ற அழகிய அம்சங்களைக் கொண்டிருப்பதால், மலைகள் இறைவனின் இருப்பிடங்களாக பல மதங்களில், கலாச்சாரங்களில் கருதப்படுகின்றன.
மலைச்சிகரங்களை அடைந்ததும் பெருமை, பெரும் நிறைவு தோன்றும்... அந்தச் சிகரங்களை அடைய மேற்கொள்ளப்பட்ட வேதனைகள் அந்த நேரத்தில் மறைந்துவிடும். மலைப் பயணங்களில் உள்ள வேதனைகள், மலையுச்சியில் நிகழும் அற்புதங்கள், அந்த அற்புதத்திலேயே தங்கிவிடமுடியாமல், மீண்டும் தரையிறங்கி வந்து நாம் சந்திக்கவேண்டிய சராசரி வாழ்க்கை என்ற பல கோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன இன்றைய ஞாயிறு வாசகங்கள்.
சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்கு தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

"சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை... இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்." என்ற எண்ணங்களைச் சென்ற ஞாயிறு சிந்தனையில் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
சென்ற ஞாயிறு நாம் வாசித்த மாற்கு நற்செய்திப் பகுதியின் துவக்க வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்:
மாற்கு 1 : 12
அக்காலத்தில், தூய ஆவியால் இயேசு பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்.
சாத்தானின் சோதனைகள் இருந்த பாலை நிலத்திற்கு தூய ஆவியார் இயேசுவை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வி மனதில் நெருடுகிறது. இந்த ஞாயிறு, தொடக்கநூல் 22ம் பிரிவில் நாம் வாசிக்கும் முதல் வரிகள் நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும் மற்றொரு ஆழமான கேள்வியை நினைவுபடுத்துகிறது:
தொடக்கநூல் 22 : 1-2
அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்! என, அவரும்இதோ! அடியேன்என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்என்றார்.

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு, பாலை நிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்டார். ஆபிரகாம் வாழ்விலோ கடவுளே அவரைச் சோதித்தார். வாழ்வில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னுடன் பகிர்ந்துகொள்ளும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில் பல நேரங்களில் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில் எனக்கே ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை வெல்வதன் மூலம், மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்." என்ற பதிலே எனக்கும் பிறருக்கும் ஓரளவு தெளிவைத் தந்த பதில்...
வாழ்க்கையோடு போராடும் பலர், அந்தப் போராட்டங்களில் வெற்றி கண்ட பலர் நமக்குப் பாடங்களாக அமைகிறார்கள். விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று பலருக்கும் 'சோதனை மேல் சோதனை' கூடிக்கொண்டே சென்றதை நாம் பார்க்கிறோம்.

ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் மூலம் நாம் பயிலக் கூடிய பாடங்கள் பல உண்டு. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100. ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
இறைவனின் கட்டளைகள் பலவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றிவந்த ஆபிரகாமுக்கு, கேள்விகள் ஏதும் கேட்காமல், மறுப்பு ஏதும் சொல்லாமல் பணிவதே பழக்கமாகி விட்டது. “இறைவன் கொடுத்தார், இறைவன் மீண்டும் கேட்கிறார்” என்று ஆபிரகாம் எண்ணியிருக்கக் கூடும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை. மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற பாரம்பரியத்தில் வளர்ந்தவர் ஆபிரகாம். அந்த மலையில், தான் நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்ளும் வகையில் இறைவன் கொடுத்த கட்டளை ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.

ஒரு நொடியில் தலைவெட்டப்பட்டு உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அந்தச் சித்ரவதையை ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட இந்தப் பலியை வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் ஆபிரகாம் நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார். அந்த மூன்று நாட்களும் அந்தத் தந்தையின் மனம் அடைந்த சித்ரவதையை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
மேலும், அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம் சிறுவன் ஈசாக்கின் தோள் மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும் வழியில், தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அக்குழந்தையின் கேள்வி ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். உண்மையான பதிலைச் சொல்லமுடியாமல், ஆபிரகாம் ஏதோ ஒரு பதிலைச் சொல்லிச் சமாளித்தார்.

மகனைப் பலிதருவது என்பதே ஆபிரகாமுக்கு இறைவன் தந்த கொடூரக் கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற முடியாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு பல வழிகளில் கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்ததுபோல், இயேசு சிலுவை சுமந்தார். பாடுகளின்போது இயேசு கேட்ட கேள்விகளுக்குத் தந்தை பதில் ஏதும் தரவில்லை... இப்படி பல ஒப்புமைகள் வழியே இந்த நிகழ்வு கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும் இயேசுவின் பாடுகளின்போது வேதனை அடைந்தார் என்பது விவிலிய விரிவுரையாளர்கள் சொல்லும் ஒரு பதில்.

மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.
கடவுள் அனுபவம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய இந்த நிகழ்வின் கடைசிப் பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது "நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்." என்பதே.
அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று இயேசு கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.








All the contents on this site are copyrighted ©.