2012-03-02 15:09:48

வெளிநாட்டவர்கள் அதிகம் குடியேறும் நாடுகளில் இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம்


மார்ச்02,2012. இந்தியாவில் வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், உலகில் வெளிநாட்டவர் அதிகம் வாழ்கின்ற பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பிறநாடுகளுக்குத் தம் மக்களை அனுப்பும் நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகைப் பிரிவு வெளியிட்ட புதிய புள்ளி விபரங்களின்படி, 2010ம் ஆண்டில் 54 இலட்சம் வெளிநாட்டவர் இந்தியாவில் வாழ்ந்தனர் என்று தெரிய வந்துள்ளது.
இவ்வெண்ணிக்கையின் அடிப்படையில், வெளிநாட்டவர் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
1990ம் ஆண்டில் இந்தியாவில் 75 இலட்சம் வெளிநாட்டவர் வாழ்ந்தனர் எனவும், இரண்டாயிரமாம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 64 இலட்சமாகக் குறைந்தது எனவும், வயது முதிர்ந்த வெளிநாட்டவரும் அகதிகளும் இறந்ததே இதற்குக் காரணம் எனவும் அவ்விபரங்கள் கூறுகின்றன.
2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தெற்காசிய மக்கள்தான் அதிகம் குடியேறுகின்றனர் என்றும், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மும்பையிலும், பிரிட்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பெங்களூருவிலும் அதிகம் வாழ்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர் குடியேறும் நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.