2012-03-02 14:35:43

மார்ச் 02, 2012. கவிதைக் கனவுகள்.......... இப்போது புரிகிறது


காலம் கை நழுவிப் போகிறது, கை மீறிப்போகிறது.
அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
நாளை என்பது இன்று வரை வந்ததில்லை.
காலம், ஒளியில் பல வண்ணம் காட்டி
மறு நொடியில் மாயமாகும் பனித்துளி.
இந்தச் சிறுதுளிக்குள் தான்
பேராசை அலைகள் கொண்டு
அழிவுகளைத் தூங்க விடுவதில்லை நாம்.

சுயநலங்கள் சுவரேறி கொக்கரிக்கின்றன.
வரவேற்பறைகளில் வெற்றிகளுக்கு மட்டும்தான் இடம்
என்பதை அவை அறிந்தேயிருக்கின்றன.
விழி திறக்க மறுக்கும் வழிதேடல்கள் தொடர்வதால்
குருட்டு யோகத்தில் நம்பிக்கைகள் அதிகரிக்கின்றன.
சேமித்த அனுபவங்கள் பரணில் தூங்குகின்றன.
வலி அறியா மணிமகுடங்கள் வரவில் ஏறுகின்றன.

இலவசங்களில் உழைப்பை இழந்தோம்
திரைப்படங்களில் பகுத்தறிவை இழந்தோம்
தொலைக்காட்சித் தொடர்களில்
மிச்சமிருக்கும் கண்ணீரையும் இழந்தோம்.
புலியைப் பார்த்து சூடு போட்டு
நம் இயல்பு நிறத்தையும் இழந்தோம்

இன்னும் என்ன இருக்கிறது?
நாம் கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது
என்பது உறைக்கும்போதுதான் உலகமே புரிகிறது.








All the contents on this site are copyrighted ©.