2012-03-01 15:27:57

இந்திய நகரங்களின் சேரிப் பகுதிகளில் பிறக்கும் குழந்தை ஓராண்டு நிறைவுக்கு முன் மரணம் UNICEF இந்தியப் பிரதிநிதி


மார்ச்,01,2012. இந்திய நகரங்களின் சேரிப் பகுதிகளில் பிறக்கும் ஒரு குழந்தை ஓராண்டு நிறைவுக்கு முன் மரணம், அல்லது, அக்குழந்தை 18 வயதை அடைவதற்குள் திருமணம் ஆகிய பிரச்சனைகளைச் சந்திக்கிறது என்று, குழந்தைகளின் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ள UNICEF என்ற ஐ.நா. அமைப்பின் இந்தியப் பிரதிநிதி Karen Hulshof கூறினார்.
‘2012ம் ஆண்டில் உலகக் குழந்தைகளின் நிலை’ என்ற அறிக்கையை UNICEF இச்செவ்வாயன்று வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் நிலை குறித்த ஓர் அறிக்கை, புதுடில்லியில் இப்புதனன்று வெளியிடப்பட்டபோது, ஐ.நா.அதிகாரி இவ்வாறு கூறினார்.
இந்தியாவின் பெருநகரங்களில் 50,000க்கும் அதிகமான சேரிகளில் 9 கோடியே 70 இலட்சம் வறியோர் வாழ்கின்றனர் என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.
மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் நகர்வாழ் ஏழைகள் அதிகம் உள்ளனர் என்று இவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
இதே நிலை நீடித்தால், 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வாழ நேரிடும் என்றும் இவ்வறிக்கை கணிக்கிறது.
நகர்வாழ் ஏழைகளில் மிக அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது குழந்தைகளே என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கை, உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்கும் இக்குழந்தைகளைக் காப்பது இன்றைய இந்திய சமுதாயத்தின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறது.








All the contents on this site are copyrighted ©.