2012-03-01 15:27:00

அருளாளர் இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையின் மூலம் ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவிகள்


மார்ச்,01,2012. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைநிலப் பகுதிகளில் Sahel என்றழைக்கப்படும் மிகவும் பின்தங்கிய நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு அருளாளர் இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையின் மேல்மட்டக் கூட்டம் ஒன்று அண்மையில் உரோம் நகரில் முடிவடைந்தது.
இந்த வறுமைப்பட்ட நாடுகளில் 200க்கும் அதிகமான செயல்திட்டங்களை நிறைவேற்ற 20 இலட்சம் டாலர்கள், அதாவது 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று "Cor Unum" என்ற பாப்பிறைக் கழகத்தின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இப்பகுதிகளில் மீண்டும் நிலவும் வறட்சியும், அதன் விளைவாக ஏற்படும் பட்டினிச் சாவுகளும் இந்த அவசர உதவிகளை செய்யத் தூண்டியுள்ளன என்று கூறினார் அருள்தந்தை Toso.
Sahel பகுதியில் திருஅவை சிறுபான்மையான மக்களையே கொண்டிருந்தாலும், இந்த மனிதாபிமான செயல்களால், மற்ற மதத்தினருடன், சிறப்பாக அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியருடன் இன்னும் இணக்க வாழ்வை மேம்படுத்த உதவும் என்று கூறினார் அருள்தந்தை Toso.
1980ம் ஆண்டு அருளாளர் இரண்டாம் ஜான்பால் ஆப்ரிக்காவுக்கு மேற்கொண்ட முதல் திருப்பயணத்தைத் தொடர்ந்து, அவர் பெயரால் இந்தப் பிறரன்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.