2012-02-29 15:36:58

தமிழக முதல்வருடன் கூடங்குளம் எதிர்ப்புக் குழு சந்திப்பு


பிப்.29,2012. கூடங்குளம் அணுமின்உலை குறித்து மாநில அரசின் வல்லுனர் குழு இச்செவ்வாயன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், கூடங்குளம் எதிர்ப்புக்குழு இப்புதனன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியது.
கூடங்குளம் அணுமின்உலை இறுதிகட்டப் பணிகள் எட்டியிருந்த நிலையில், உதயகுமார் தலைமையிலான எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் கூடங்குளம் மக்களின் கருத்துகளை அறிய டாக்டர் இனியன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 18ம் தேதி முதல் கூடங்குளம் அணுஉலையை ஆய்வு செய்த இக்குழு, இச்செவ்வாயன்று தனது அறிக்கையை மாநில அரசிடம் வழங்கியது.
கூடங்குளம் எதிர்ப்புக்குழு போராட்டத்திற்கு வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் அரசுசாரா அமைப்புகள் நிதியுதவி செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு உதயகுமார் குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் குழுவினர் இப்புதனன்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது, மாநில அரசின் வல்லுனர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு எதிராக மனு ஒன்றை அளித்துள்ளனர்.
முதலமைச்சருடன் சந்திப்பை முடித்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயகுமார் குழுவினர், டாக்டர் இனியன் தலைமையிலான குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக உள்ளது என்றும் முதல்வரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.