2012-02-28 15:27:10

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 105


RealAudioMP3 மருதநாட்டு இளவரசி மிக அழகானவள். அதோடு அறிவுக்கூர்மையுடையவள். அவளை மணக்க அக்கம் பக்கத்திலிருக்கும் எல்லா நாட்டு இளவரசர்களும் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் இளவரசியை மணப்பதற்கான சுயம்வரம் நடந்தது. அதற்கு எல்லா நாட்டு இளவரசர்களும் வந்திருந்தார்கள். இளவரசியை யார் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதையெல்லாம் பார்த்துவிட்டு, இறுதியிலே இளவரசி ஒருவரைத் தேர்ந்தெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே எல்லா இளவரசர்களும் தயாராக வந்திருந்தனர். இளவரசியின் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இளவரசி வரும்வழியில் மிகக்கொடிய பாம்பு ஒன்று கடித்துவிடுகிறது. அரண்மனை மருத்துவரோ, பாம்புக் கடியைக் குணப்படுத்தத் தேவையான மருந்து அந்நாட்டின் எல்லையிலிருக்கிற காட்டிலேதான் இருக்கிறது. அந்தக்காடு மிகவும் ஆபத்தானது. அங்கு சென்றவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லை. எனவே இந்தப் பாம்புகடிக்கு மட்டும் தன்னிடம் மருந்து இல்லை என்று சொன்னதுடன், இன்னும் 6 மணி நேரத்திற்குள் அம்மருந்தைக் கொண்டு வரவில்லையெனில் இளவரசி உயிர் இழக்க நேரிடும் என்றும் கூறினார். ‘உயிரைப் பணயம் வைத்து’ என்றவுடன் இளவரசர்கள் யாரும் முன்வரவில்லை. அவர்களோடு வந்திருந்த தளபதிகளும், அமைச்சர்களும் அது ஆபத்தான காடு என்பதால் இளவரசர்களை அனுப்பவும் மறுத்தார்கள். எனவே யாரை அனுப்பலாம் என அவர்களுக்குள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அவர்கள் ஆலோசனை செய்து தளபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குள் 4 மணிநேரம் கடந்துவிட்டது. இன்னும் இரண்டு மணிநேரம் மட்டுமே இருந்தது. அந்நேரத்தில் இளைஞன் ஒருவன் காற்றைப்போல பறந்துவந்தான். இளவரசிக்குத் தேவையான மருந்தைக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டான். அதற்கு அடுத்தநாள் சுயம்வரம் நடந்தது. எல்லா இளவரசர்களும் தாங்கள் எவ்வளவு இளவரசியை நேசிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் இறுதியில் இளவரசியோ அவர்களில் ஒருவரையும் தெரிவு செய்யாமல் ஏழை இளைஞன் ஒருவனை மணக்கப்போவதாக அறிவித்தாள். இதைக்கண்ட இளவரசர்கள், தங்களை நிராகரித்ததற்கான காரணம் என்ன என்றும், அவனை தெரிவுசெய்ததற்கான காரணத்தையும் கேட்டார்கள். அப்போது இளவரசி சொன்னார்: இவ்வளவு நேரம் நீங்கள் அனைவரும் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் உங்கள் அன்பு செயலில்லாத அன்பு, செத்த அன்பு என்பதை நேற்றே புரிந்து கொண்டேன். என்மீது வைத்த அன்பைத் தன் செயலால் வெளிப்படுத்தியவர் இவர்தான். நான் பிழைப்பதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து மருந்து கொண்டுவந்த இவரைத்தான் மணப்பேன் எனக்கூறினார்.

அன்பார்ந்தவர்களே! இறையன்பு செயலில் வெளிப்படுகிறது. இவ்வுலகையும் நம்மையும் படைத்த இறைவன் அத்தோடு நின்று விடாமல் தன் செயல்கள் வழியாக அன்றும், இன்றும் நம்மைக் காத்துவருகிறார். எனவே நாமும் நமது அன்பை செயலில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே திருப்பாடல் 105 நமக்குச் சொல்லும் செய்தி.
கடந்தவாரம் நாம் சிந்தித்தது திருப்பாடல் 104. இறைவனின் படைப்பை எண்ணி, வியந்து பாடப்பட்டத் திருப்பாடல் என்றும், இறைவனின் படைப்புக்களான நீர், நிலம், மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மனிதர்கள், கதிரவன், நிலா என எல்லாவற்றிலும் உறைந்திருக்கும் இறைவனைக் கண்டு வணங்கவும், வாழ்த்தவும் வேண்டும் என அழைப்பு விடுக்கின்ற திருப்பாடல் எனச்சிந்தித்தோம். அதை அடுத்த திருப்பாடல் 105, இறைவன் நமக்குச் செய்த செயல்களிலே அவரைக் காணவேண்டும் வணங்கவேண்டும், வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறது.
‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் அவர்தம் பெயரைச்சொல்லி வழிபடுங்கள் அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச்செய்யுங்கள்’ என்று தொடங்கும் இத்திருப்பாடலின் முதற்பகுதி முழுவதும், இறைவன் தங்களுக்குச் செய்த நன்மைகளைச் சொல்லி போற்றிப் புகழ்வதாகவும், இரண்டாம் பகுதியிலே அவர்களுக்குச் செய்த செயல்களை இஸ்ரயேல் மக்கள் நினைவு கூர்வதாகவும் அமைந்துள்ளது.
‘பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்’ என்று வாக்களித்த இறைவன் அவர்களுக்கு என்னென்ன செய்தார் என்பதை ஆசிரியர் பட்டியலிடுகின்றார். திருப்பாடல் 105 : 11, 12 மற்றும் 14
கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்; அப்பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்' என்றார் அவர்.
அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்; அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள்.
யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை; அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்.
அவர்களுக்கு முன்பாக யோசேப்பை எகிப்திற்கு அனுப்பி, எல்லாருக்கும் மேலாக உயர்த்தி, அவர் கையாலே அவர்களது பசி, பஞ்சத்தை நீக்கினார். அதன்பிறகு பாரவோனினிடமிருந்து விடுவிக்க கொள்ளை நோய்களை வரச்செய்தார். மோசே வழியாக அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறச்செய்தார் பாலைவனப்பயணத்திலே அற்புதங்களையும், அருளடையாளங்களையும் செய்து அவர்களைக் காப்பாற்றினார். இவ்வாறு இறைவன் சொன்னபடியே தன் வாக்குறுதியைச் செய்துகாட்டினார். எனவே அவருடைய சட்டங்களைக் கடைபிடிப்போம்; அவரைப்பற்றிக்கொள்வோம்; அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என முடிவு பெறுகிறது.
திருப்பாடல் 105 : 42, 43 மற்றும் 45
ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.
அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலூயா!

அன்பார்ந்தவர்களே! இத்திருப்பாடலைச் சிந்திக்கிற நாமும் இறைவன் நமக்குச் செய்த செயல்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்து இறைவன் செய்தவற்றை நினைத்துபார்த்து பட்டியிலிட்டுப் பார்த்தால் நமக்கு அவர் எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை உணரமுடியும். இறைவனுக்கு நன்றி கூறுவதோடு நாமும் அவரைப்போலவே பிறர்பால் கொண்டிருக்கும் அன்பை நமது செயல்கள் வழியாக வெளிப்படுத்தவேண்டும். இதற்கு திருவிவிலியத்திலே பல்வேறு உதாரணங்கள் குவிந்து கிடக்கின்றன. லூக்கா நற்செய்தி 10:25-37ல் இடம்பெறும் நல்ல சமாரியன் உவமை, அன்பு செயலில் வெளிப்பட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். தான் கருவுற்றிருந்தபோதும், மலைநாட்டுக்குச் சென்று எலிசபெத்தின் பேறுகாலத்தில் உதவிய அன்னை மரியாள் மற்றுமொரு உதாரணம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்றது யோவான் நற்செய்தி 3:16
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
பிறருக்கு ஆலோசனை சொல்வதில் பலர் வல்லவர்கள். ஆனால் செயல் என்று வரும்போது பின்வாங்கி விடுகிறார்கள். ஆலோசனை கூறுவது மிக எளிது. ஆனால் அதைச் செயல்படுத்துவது மிகக்கடினம். பிறர் மீது வைத்திருக்கிற அன்பு ஆலோசனையோடு நின்றுவிட்டால், அது முழுமை பெறாது. நம்மிடம் இருக்கிற பொருட்களை மட்டுமல்ல, மாறாக நமது நேரத்தையும் உழைப்பையும்… ஏன் நம்மையே கொடுக்கவேண்டும் என்பதைத்தான் மேற்குறிப்பிட்ட சொற்றொடர் நமக்குச்சொல்கிறது. தந்தையாம் இறைவன் தன் ஒரே மகனையே நம்மீது கொண்ட அன்பிற்காக கொடுத்துவிட்டார். நம்மீது வைத்த அன்பை இறைவன் செயலில் வெளிப்படுத்தினார் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு நம்மால் சொல்லமுடியாது.

நாமும் பிறர்மீது கொண்டிருக்கிற அன்பை நமது செயல்களில் வெளிப்படுத்தும் வாய்ப்பை திருச்சபை நாம் துவங்கியிருக்கும் தவக்காலத்திலே நிறைய ஏற்படுத்தித் தருகிறது. திருநீற்று புதன் மற்றும் புனித வெள்ளியன்று ஒருசந்தி அனுசரிக்க வேண்டும் எனத் திருச்சபை வலியுறுத்துகிறது. இது ஓர் ஒறுத்தல் என்பது ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் நாம் உண்ணாமல் மிச்சப்படுத்தும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும், நமது ஒறுத்தல் பிறருக்குப் பயனள்ளதாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் செய்யப்படுகிறது. புனித வெள்ளி வழிபாட்டிலே திருச்சிலுவை முத்திசெய்கின்ற போது எடுக்கப்படும் காணிக்கை பசி, பிணிக்காக அனுப்பப்படும் என்ற அறிவிப்போடுதான் எடுக்கப்படுகிறது. இது அல்லாமல், ஒவ்வொரு பங்கிலும் தவக்கால உண்டியல், ஒரு நாளுக்கு ஒரு கைபிடிஅரிசி என தவக்காலம் முழுவதும் சேர்த்து வைப்பது எனப் பல்வேறு செயல்கள் அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஏழை மாணவ மாணவியருக்கு கல்வியுதவி எனப் பிறரன்பில் தான் வெளிப்படுகிறது. நாமும் பிறருக்கு உதவி செய்யவேண்டும், நமது அன்பை செயல்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த நேரம் வரும்போது, எதாவது சாக்குபோக்கு சொல்லி தவிர்த்து விடுகிறோம்.

காதல் திருமணம் செய்திருந்தாலும் எண்ணற்ற தம்பதியர் மணமுறிவுக்காகக் காத்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகள் பிரிந்துகிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அன்பு இல்லையென்று சொல்லிவிட முடியுமா? இவற்றிற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவர்களது அன்பு செயலில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதே அடிப்படைக்காரணம் எனக் கருத்துகிறேன்.
அதற்காக, நமது குடும்பங்களில், சமுதாயத்தில் அன்பு இல்லை என்று சொல்லவில்லை. மாறாக பிறர்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு, பல சமயங்களிலே நமது மனதோடு நின்றுவிடுவதைச் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும் எனச்சொல்கிறேன். கணவன், மனைவி உறவாக இருக்கலாம் அல்லது பெற்றோர், பிள்ளை உறவாக இருக்கலாம் அல்லது சகோதர, சகோதரிகள் உறவாக இருக்கலாம். எல்லாரிடத்திலும் அன்பு இருக்கிறது. இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்த அன்பு செயல்களில் வெளிப்படுகிறா? அந்த அன்பு செயல்களில் வெளிப்படும் போதுதான் அது எல்லாருக்குமே மகிழ்ச்சி தருகிறது. “நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்” என்று புனித யாக்கோபு தன் திருமுகம் 2:17 ல் சொல்வதைப் போல செயலற்ற அன்பு செத்த அன்புதான். எனவே பிறர்பால் நாம் கொண்டிருக்கிற அன்பை நமது செயல்களில் வெளிப்படுத்துவோம். நம் வாழ்நாள் முழுவதும் தன் அன்பை செயல்களில் வெளிப்படுத்தும் இறைவன் நமக்கு தூண்டு சக்தியாக இருந்து நம்மை வழிநடத்துவராக.








All the contents on this site are copyrighted ©.