2012-02-28 14:57:41

தென்கொரிய ஆயர்: புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தென் கொரியக் குழந்தைகளுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவதற்கு திருஅவை எப்போதும் பாடுபடும்


பிப்.28,2012. கொரியாவுக்குப் புலம்பெயர்ந்த பிறநாட்டினரின் குழந்தைகள் இறைவன் இந்த நாட்டிற்கு வழங்கிய கொடைகள் என்றும், அவர்கள் கொரியாவுக்கும் உலகிற்கும் தேவைப்படும் முக்கியமானவர்கள் என்றும் தென்கொரிய ஆயர் ஒருவர் கூறினார்.
தென் கொரியாவுக்குப் புலம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்த கொரிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரும் Daejeon மறைமாவட்டத்தின் ஆயருமான Lazarus You Heung-sik, புலம்பெயர்ந்தோர் மட்டில் திருஅவை காட்டும் அக்கறையை அரசும் காட்டவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.
கொரிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு ஒவ்வோர் ஆண்டும் நான்கு முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Heung-sik, இந்த அவை புலம்பெயர்ந்தோருக்குச் செய்யும் கல்விப் பணி, மருத்துவ உதவிகள், ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
தென் கொரியாவுக்குப் புலம் பெயர்ந்தோரிடையே, சீனா, பிலிப்பின்ஸ், வியட்நாம் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களே அதிகம் என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Heung-sik, புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் தென் கொரியக் குழந்தைகளுக்கு ஈடான உரிமைகளைப் பெறுவதற்கு திருஅவை எப்போதும் பாடுபடும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.