2012-02-28 14:56:24

அப்பாவி மக்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்று மனநல காப்பகத்தில் அடைத்து வைக்கும் சீன அரசு


பிப்.28,2012. சீனாவில் குற்றமற்ற அப்பாவி மக்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்று கூறி, அவர்களை மன நல காப்பகத்தில் அடைத்து வைக்கும் அரசின் போக்கைக் கண்டித்து, அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வருகிற மார்ச் மாதம் சீனாவில் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ள இச்சூழலில், Civil Rights and Livelihood Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசின் இந்தப் போக்கு அண்மைய காலங்களில் அதிகமாகி வருவதைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய இவ்வமைப்பின் பேச்சாளர் Liu Feiyue, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் பலரும் இத்தகையக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.
அரசின் இந்த அடக்கு முறையால், அப்பாவி பொதுமக்களின் வாழ்வு சீர்குலைவதொடு, அவர்கள் இந்தக் காப்பகங்களில் இருந்து திரும்பி வந்த பிறகும் அவர்களை சமுதாயம் சரிவர நடத்துவதில்லை என்று Liu Feiyue எடுத்துரைத்தார்.
சீனாவில் தற்போது 1 கோடியே 60 இலட்சம் மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை, அந்நாட்டின் நல வாழ்வு துறைக்கு பெரும் பாரமாக அமைந்துள்ளது என்றும் WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.