2012-02-27 15:02:57

டெல்லியின் தூய இதய பேராலயம், நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது


பிப்.27,2012. டெல்லியில் உள்ள இயேசுவின் தூய இதய பேராலயம், நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது என தன் பாராட்டுக்களை வெளியிட்டார் டெல்லி பெருமறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் கொன்செசாவோ.
டெல்லி பேராலயம் திருநிலைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி, இந்தியாவிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, பிஜ்னோரின் ஓய்வு பெற்ற ஆயர் கிரேசியன் முண்டாடன், ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா, டெல்லி துணை ஆயர் ஃபிராங்கோ மூலக்கல் ஆகியோருடன் இணைந்து 75ம் ஆண்டு விழாத்திருப்பலியை நிறைவேற்றிய பேராயர் கொன்செசாவோ, நம் முன்னோர்களிடமிருந்து நமக்கு விசுவாசம் வழங்கப்பட்டதன் அடையாளமாக நிற்கும் டெல்லி தூய இதய பேராலயம், விசுவாசத்தை, அடுத்த தலைமுறைக்கும் வழங்கவேண்டும் என்பதனை நினைவுறுத்தி நிற்கின்றது என்றார்.
வழிபடவும் உண்மையான மன அமைதியைப் பெறவும் எண்ணற்றோர் ஒவ்வொரு நாளூம் இப்பேராலயத்திற்கு வந்துசெல்வதாக அதன் பங்குரு மரிய சூசை தெரிவித்தார்.
1929ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இப்பேராலயம், 1935ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.