2012-02-25 14:16:48

திருப்பீட-வியட்னாம் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும்


பிப்.25,2012. திருப்பீடத்துக்கும் வியட்னாமுக்கும் இடையே அரசியல் உறவை உருவாக்குவதற்கு அடிப்படையான முயற்சிகளை எடுப்பதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விரு நாடுகளும் இணைந்த பணிக்குழு, தனது மூன்றாவது கூட்டத்தை இம்மாத இறுதியில் ஹனோயில் நடத்தும் என வத்திக்கான் தகவல் மையம் அறிவித்தது.
2010ம் ஆண்டு ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் இவ்விரு தரப்பும் வத்திக்கானில் நடத்திய இரண்டாவது கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இம்மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் வியட்னாம் நாட்டின் ஹனோயில் இப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் என அத்தகவல் மையம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வியட்னாம் நாட்டுக்கான பாப்பிறைப் பிரதிநிதிகள் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளின் உறவுகள் உறுதிப்படவும் மேம்படவும் இப்பணிக்குழுவின் கூட்டம் உதவும் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
வியட்னாமில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இடம் பெற்று வருகின்ற போதிலும், சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்குவது குறித்த அரசியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தவிர்க்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.