2012-02-25 14:19:03

தமாஸ்கஸ் ஆயர் : சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருகின்றன


பிப்.25,2012. சிரியாவில் கலவரங்கள், கட்டுப்பாடின்றி நடந்து வருவதாகவும், ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற பயத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பிரியாவிடையைப் பரிமாறிக் கொள்கின்றனர் எனவும் அந்நாட்டு மூத்த ஆயர் ஒருவர் கூறினார்.
தமாஸ்கஸ் மாரனைட் ரீதிக் கத்தோலிக்கப் பேராயர் சமீர் நாசர், Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்கு எழுதிய அறிக்கையில், மீண்டும் சந்திப்போம் என்பதில் நம்பிக்கையற்ற மக்கள், ஞாயிறு திருப்பலி முடிந்து ஒருவருக்கொருவர் பிரியாவிடை சொல்லிக் கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சிரியாவின் தென் பகுதியில் தொடங்கிய ஒரு சிறிய எதிர்ப்பு ஊர்வலம், இவ்வளவு பெரிய கலவரமாகப் பரவியுள்ளது என்றும் பேராயர் நாசர் கவலை தெரிவித்தார்.
இக்கலவரத்தையொட்டி சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினால், நாட்டின் பணவீக்கம் 60 விழுக்காடாக ஆகியுள்ளது, வேலைவாய்ப்பின்மை எகிறியுள்ளது. புலம் பெயர்வுகளும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்காக உள்ளது எனவும் தமாஸ்கஸ் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சிரிய மக்களின் நண்பர்கள், துனிசியாவில் இவ்வெள்ளியன்று நடத்திய அனைத்துலக கருத்தரங்கில் பேசிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், சிரியாவின் தற்போதைய பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.