2012-02-25 14:37:56

கவிதைக் கனவுகள்... சோதனை இரத்தத்தின் முத்துக்கள்


சோதனையும், சாதனையும்
ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள்
ஒரே காசின் இரு முகங்கள்

இன்னும் ஆழமாய் அகழ்ந்தால்,
ஊற்றெடுக்கும் உண்மைகள் பிற.
சோதனை தாயென்றால்,
சாதனை சேய்.
சோதனை வேரென்றால்,
சாதனை மரம்.
சோதனை அடித்தளமென்றால்,
சாதனை கோபுரம்.

சோதனை இருளில் புதைந்து
சாதனை ஒளியில் உயிர்த்த
சாதனையாளரைக் கேளுங்கள்...
சோதனையின்றி சாதனை இல்லை என்று
சத்தியம் செய்வார்கள்

எடிசனைக் கேளுங்கள்...
ஒருமுறை ஒளிர்ந்த மின் விளக்கில்
ஓராயிரம் இரவும் இருளும்
கரைந்த கதையைக் கேளுங்கள்...

மிக்கேலாஞ்சலோவைக் கேளுங்கள்...
உளிகொண்டு அவர் வடித்த
உன்னத அதிசயங்கள் பிறக்க
உள்ளத்தில் அவர் சுமந்த
உளிகளின் வலிகளைக் கேளுங்கள்...

சாதனை வரலாற்றின் பக்கங்கள்
சோதனை இரத்தத்தின் முத்துக்கள்








All the contents on this site are copyrighted ©.