2012-02-25 14:22:02

7. போலியோ பாதிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!


பிப்.25,2012. 2011ம் ஆண்டு இந்தியாவில் போலியோ பாதிப்பு இல்லாத ஆண்டாக இருந்தவேளை, இந்தியாவை, போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இவ்வெள்ளியன்று நீக்கியது உலக நலவாழ்வு நிறுவனம்.
டெல்லியில் இவ்வெள்ளியன்று தொடங்கிய 'போலியோ மாநாடு 2012'-ல், பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தத் தகவலை வெளியிட்டார்.
உலக நலவாழ்வு நிறுவனத்திடம் இருந்து இவ்வெள்ளி காலை கடிதம் ஒன்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "கடந்த ஒராண்டாக போலியோ பாதிப்பு இல்லாததால், போலியோ பாதிப்புள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.
இதற்கு முன்னர், போலியோ பாதிப்புள்ள 4 நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு போலியோ பாதிப்பு இல்லாத பட்சத்தில், 'இந்தியாவை போலியோ இல்லாத நாடு' என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவிக்கும் எனவும் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சனவரி 13ம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி பாதிக்கப்பட்டதுதான் கடைசியாகப் பதிவான போலியோ பாதிப்பு. அதற்குப் பிறகு இவ்வாண்டு சனவரி 13 வரை, நாட்டில் ஒரு குழந்தைகூட போலியோவால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.