2012-02-24 15:05:09

போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றவாளிகளில் முதன்முறையாக சிலர் தனிப்பட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்


பிப்.24,2012. போர் தொடர்புடைய கடும் பாலியல் வன்முறைக் குற்றங்களைச் செய்தவர்களில், சில இராணுவத்தினர், உப இராணுவத்தினர், இன்னும் பிற ஆயுதம் தாங்கிய குழுக்களைத் தனது சந்தேகப் பட்டியலில் முதன்முறையாகச் சேர்த்துள்ளது ஐ.நா. நிறுவனம்.
“போர் தொடர்புடைய பாலியல் வன்முறை” என்ற தலைப்பில், இவ்வியாழனன்று ஆண்டறிக்கை வெளியிட்ட ஐ.நா. நிறுவனம், போர் தொடர்புடைய பாலியல் வன்முறை, ஒரு நாட்டிலோ அல்லது ஒரு கண்டத்திலோ மட்டும் இடம் பெறுவதில்லை, மாறாக, இது உலக அளவில் இடம் பெறும் ஆபத்தான செயல் என்று குறை கூறியுள்ளது.
பெண்கள் வியாபாரம் செய்யும் சந்தைகளிலும், பள்ளிக்குச் செல்லும் சிறாரின் பாதையிலும், அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள சிறைகளிலும், போர்கள் நுழைந்து விட்டன எனவும், பாலியல் வன்செயல் நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நேபாளம், இலங்கை, கிழக்குத் திமோர், லைபீரியா, சியெரா லியோன், போஸ்னியா-எர்செகொவினா போன்ற நாடுகளில், சண்டை முடிந்த பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதியைக் கட்டி எழுப்புவதற்கும் பாலியல் வன்முறை எவ்வளவு தூரம் அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருக்கின்றது என்பதையும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் LRA புரட்சிக்குழு, தென் சூடானிலுள்ள ஆயுதம் தாங்கிய உப இராணுவக் குழுக்கள், ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் ஆயுதம் தாங்கிய குழுக்கள், காங்கோ சனநாயகக் குடியரசின் ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஆகியவை அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
தேர்தல்கள், அரசியல் நெருக்கடி, உள்நாட்டுப் பதட்டநிலைகள் போன்ற சமயங்களில், எகிப்து, கினி, கென்யா, சிரியா போன்ற நாடுகளில் பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டதையும் இந்த ஐ.நா. அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.
இவ்வறிக்கையை ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margot Wallström வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.