2012-02-24 15:05:57

திருப்பீடப் பேச்சாளர் : சொமாலியாவை மீண்டும் கட்டி எழுப்பும் முயற்சியில் அனைவரும் பங்கு கொள்ள அழைப்பு


பிப்.24,2012. கடந்த பல ஆண்டுகளாக, போர், பஞ்சம் மற்றும் வறுமையினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியாவில், ஒப்புரவையும் அமைதியையும் கட்டி எழுப்புவதற்கான முயற்சியில், கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில், நாம் அனைவரும் பங்கு கொள்வோம் என்று திருப்பீடப் பேச்சாளர் அழைப்பு விடுத்தார்.
சொமாலியாவின் தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் இலண்டனில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் குறித்து Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
1989ம் ஆண்டில் மொகதிஷ்சு ஆயர் கொலம்போ, 1995ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் கிராசியெல்லா ஃபூமாகாலி, 2003ம் ஆண்டில் தன்னார்வப் பணியாளரான மருத்துவர் அன்னலீனா தொனெல்லி, 2006ம் ஆண்டில் அருள்சகோதரி லியோனெல்லா ஸ்கோர்பாட்டி ஆகியோர் சொமாலியாவில் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அவர், அன்பே அனைத்தையும் வெல்லும் என்று அன்னலீனா கூறியதையும் சுட்டிக் காட்டினார்.
இவ்வன்பின் அடிப்படையில் நாம் அந்நாட்டிற்கு உதவுவோம் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கேட்டுள்ளார்.
சொமாலியாவின் எதிர்காலத் தீர்வு குறித்து இடம் பெற்ற இந்த இலண்டன் கூட்டத்தில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சொமாலியக் கடல்கொள்ளையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியப்பெருங்கடலில், கண்காணிப்புக் கப்பலை, பிரிட்டனும், மற்ற நாடுகளும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.