2012-02-23 14:59:13

கவிதைக் கனவுகள்........ தீயவன் பிறக்கவில்லை


தினத்தாள் தினமும்
எதை மறந்தாலும் மறைத்தாலும்
வன்முறைச் செய்திகளை
வரிவரியாய்த் தாங்கிவரத் தயங்காது.
மனிதரின் மனதில்
மலைமலையாய் வந்து போகும்
வன்முறைக் கனவுகள்
கொலையாய் கொள்ளையாய்
வெளிப்படும் கொலைகார மனிதரின்
வெறியாட்டத்தை வேடிக்கைப் பார்த்து
வன்முறைக் கனவுகளை நனவாக்குகின்றது ஒரு கூட்டம்.

மனோதத்துவ நிபுணர்கள்
பார்க்கிறார்கள் வியப்புடன்
கேட்கிறார்கள் குழப்பத்துடன்
இவராத் தொடர் கொலையாளி
இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்கும்
இவரா கொள்ளைக்காரர்.
கேள்விகள் தொடருகின்றன
பதில்களும் வருகின்றன 53 கொலைகளுக்கு
உரிமையாளர் ஒருவரிடமிருந்து.

பன்னிரண்டு வருடங்கள் பதறாமல் செய்தேன் 53 கொலைகளை
ஏன்...ஏன்... ஏனென்று கேளுங்கள்...?
பத்து வயது என் அண்ணனை
என் கண்முன்னே கொன்று
உடலைத் துண்டு துண்டாக்கி
தீயில் வறுத்தெடுத்துச்
சாப்பிட்டது சாவகாசமாக ஒரு கூட்டம்.
அப்பா போர்க் கைதி
அம்மாவிடம் அடி உதை அன்றாடம்
அம்மாவின் அன்பு துளியும் இல்லை
வீட்டில் பசி பட்டினி
வீட்டிலும் பாசம் இல்லை, சமூகத்திலும் ஏளனப் பேச்சு
பாசமின்றி பசியோடு தன்னந்தனியாகத் தவித்தேன்
தாழ்வுமனப்பான்மையில் குறுகினேன்... இப்படித்
தொடர்கின்றது கொலையாளின் சோகக் கதை......

புனிதனாய் வாழ வேண்டிய மனிதனைப்
பாதகனாய் மாற்றியது யார்?
கண்ணீரோடு கரம் குவிக்கிறேன்
கடவுளே, எமக்கு அன்பு காட்டும் ஈரநெஞ்சத்தைக் கொடு
கடையோரையும் கனிவோடு அணைக்கும் கரங்களைக் கொடு








All the contents on this site are copyrighted ©.