2012-02-20 15:21:00

மேற்கு வங்க அரசின் நெல் கொள்முதல் கொள்கைகளால் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை மையம் கவலை


பிப் 20, 2012. மேற்கு வங்க அரசின் நெல் கொள்முதல் கொள்கைகளால் அம்மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகக் கவலையை வெளியிட்டுள்ளது இயேசு சபையினரின் உதயானி என்ற சமூக மையம்.
உணவுக்கான உரிமை என்ற சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவ்வமைப்பின் இயக்குனர் இயேசு சபை குரு இருதய ஜோதி உரைக்கையில், அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யாமல் இடைத்தரகர்கள் மூலம் இதை மேற்கொள்வதால், குறைந்த விலையில் நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவதுடன், தங்கள் நெல்லை சொந்த செலவிலேயே அரவை நிலையங்களுக்கு எடுத்துச் சென்று இடைத்தரகர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது என்றார்.
இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருப்பதால், மேலும் கடன் சுமையுடனேயே விவசாயிகள் வாழவேண்டியிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய மேற்கு வங்க அரசு முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் இயேசு சபை குரு இருதய ஜோதி.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மேற்கு வங்கத்தில் 32 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.