2012-02-20 15:15:53

திருத்தந்தை : திருஅவையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது


பிப்.20,2012. தனக்காக அல்ல, மாறாக, மக்களை இயேசுவிடம் கொண்டு வரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்கத் திருஅவை இருந்து வருகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று 22 புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, தான் யாரிடமிருந்து வந்ததோ மற்றும் யாரால் வழிநடத்தப்படுகிறதோ அவர், தன்வழியாக ஒளிரச் செய்வதற்காகவே திருஅவை இவ்வுலகில் செயல்படுகின்றது என்றும் கூறினார்.
புனித பேதுருவின் தலைமைப்பீடம் என்ற பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, வத்திக்கான் பசிலிக்காவில் எல்லாரையும் கவர்கின்ற 17ம் நூற்றாண்டு பெர்னினியின் புனித பேதுருவின் தலைமைப்பீட உருவச் சிலை நோக்கியும் தனது சிந்தனைகளைத் திருப்பினார்.
இந்த உருவச்சிலை, திருஅவையின் சாராம்சத்தையும், திருஅவையில் திருத்தந்தையின் படிப்பினைகளின் காணக்கூடிய வெளிப்பாட்டையும் குறித்து நிற்கின்றது என்றும் அவர் கூறினார்.
பேதுருவின் பாறை, ஆளைச் சார்ந்தது அல்ல, ஆனால் இயேசுவால் அதனிடம் ஒப்படைக்கப்பட்ட அலுவலைச் சார்ந்தது என்ற திருத்தந்தை, திருவருட்சாதனங்கள், திருவழிபாடு, நற்செய்தி அறிவிப்பு, பிறரன்பு என திருஅவையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
கிறிஸ்துவின் மந்தையை விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றிணைப்பதற்கான பேதுரு மற்றும் அவரின் வழிவருபவரின் சிறப்புப்பணியின் அடையாளமாகவும் புனித பேதுருவின் தலைமைப்பீடம் இருக்கின்றது என்றும் திருத்தந்தை இப்பெருவிழாத் திருப்பலியில் கூறினார்.
திருப்பலியின் இறுதியில் மக்களோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்த திருத்தந்தை அவர்களுக்கு வழங்கிய உரையில், புதிய கர்தினால்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.