2012-02-18 15:42:50

கலவரம் மிகுந்த சிரியாவில், நலிந்தவர்கள் அடிப்படைத் தேவைகளின்றி துன்புறுகின்றனர் - அருள்தந்தை Pizzaballa


பிப்.18,2012. எகிப்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர், சிரியாவில் தற்போது காணப்படும் நிலவரம், மத்திய கிழக்குப் பகுதி மாறி வருவதைக் காட்டுகின்றது என்று, சிரியாவுக்கானப் புனித பூமி பாதுகாவலர் கூறினார்.
சிரியாவில் ஓராண்டுக்கு முன்னர் இத்தகைய நிலைமை நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது என்றும், அந்நாட்டில் அண்மை மாதங்களாக இடம் பெற்று வரும் வன்முறை உள்நாட்டுப் போர் போன்று தெரிவதாகவும் பிரான்சிஸ்கன் சபை அருள்தந்தை Pierbattista Pizzaballa வின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவின் Damascus, Aleppo, Lattakiah, Oronte போன்ற பகுதிகளில் பணியாற்றி வரும் பிரான்சிஸ்கன் சபையினரின் மருத்துவப் பராமரிப்பு இல்லங்கள், அகதிகளுக்குப் புகலிடம் வழங்கும் இடங்களாக மாறியுள்ளன என்றும் அக்குரு, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இதற்கிடையே, ஐ.நா., பொது அவையில், சிரியா அதிபர் Bashar al-Assad மீதான கண்டனத் தீர்மானத்திற்கு, இந்தியா உட்பட, 137 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இச்சூழலில், சிரியாவின் ஹோம்ஸ் நகரில், சிரியா இராணுவத்தின் கடும் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.