2012-02-17 14:39:03

பெண்கள் மற்றும் இளையோரின் குரலைக் கேட்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் நாடுகளுக்கு வேண்டுகோள்


பிப்.17,2012. உலக அளவில் இடம் பெற்ற அண்மை சமுதாயப் புரட்சிகளில் மிக முக்கிய அங்கம் வகித்த பெண்கள் மற்றும் இளையோரின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

நாடுகளின் முன்னேற்றத்திற்கு பெண்களும் இளையோரும் மிக முக்கியமானவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டிய பான் கி மூன், இவர்களின் குரல்களைப் புறக்கணிக்க வேண்டாம் என நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கெய்ரோவின் Tahrir வளாகம் உட்பட, அரபு உலகத்தில் மக்களாட்சிக்காகப் போராடியவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு Wall Street ஐ ஆக்ரமித்தவர்கள், மத்ரித்திலும் கிரேக்கத்திலும் போராடியவர்கள் என சில போராட்ட இடங்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், இவ்விடங்களில் பெண்களும் இளையோருமே பெருமெண்ணிக்கையில் பங்கெடுத்தனர் என்று கூறினார்.
பெண்கள் சம வாய்ப்புக்களையும் சம பங்கெடுப்புக்களையும் வலியுறுத்துகின்றனர், ஊழலைப் பார்த்த சோர்ந்து போன இளையோர், தங்களது வருங்காலம் குறித்து கவலை கொள்கின்றனர் என்று வியன்னாவில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
நிர்வாகக் குழுவில் அதிகமான பெண்களைக் கொண்டிருக்கும் 500 நிறுவனங்கள், அதிக இலாபத்தை ஈட்டியுள்ளதென்று அண்மை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக உரைத்த பான் கி மூன், இன்றைய சமூக ஊடகத்துறைஉலகத்திலும் அதிகமான பெண்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகின்றது என்றும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.