2012-02-17 14:39:18

இலட்சக்கணக்கான மக்கள் சூரிய சக்தி மின்சாரத்தை ஐ.நா.வழியாகப் பெறவுள்ளனர்


பிப்.17,2012. வறுமையை ஒழிப்பதற்கு ஐ.நா.வின் ஆதரவு பெற்ற ஒரு நடவடிக்கையாக, Mauritius யை மையமாகக் கொண்ட ஒரு கம்பெனி, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் 3 கோடியே 30 இலட்சம் பேருக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியினால் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வழங்கும் என்று இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் நேபாளம் ஆகிய நான்கு தெற்கு ஆசிய நாடுகளுக்கும், புருண்டி, எத்தியோப்பியா, மலாவி, மாலி, மொசாம்பிக், தென்சூடான், ஜாம்பியா, ஜிம்பாபுவே, காங்கோ சனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட் ஆகிய பத்து ஆப்ரிக்க நாடுகளுக்கும் ToughStuff என்ற நிறுவனம் இந்தச் சேவையை செய்யவிருக்கிறது.
இதன் பயனாக, மண்ணெண்ணெய் அல்லது கரி அடுப்புகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுவதால், நுகர்வோர் மத்தியில் 52 கோடி டாலர் சேமிக்கப்படும் எனவும், 2016ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் 12 இலட்சம் டன்கள் குறையும் எனவும் இந்நிறுவனம் கணித்துள்ளது.
உலகில் சுமார் பாதிப்பேருக்கு நவீன மின்சக்தி வசதிகளும், 20 விழுக்காட்டுக்கு மேற்பட்டோருக்கு மின்சார வசதியும் கிடையாது. வீட்டுப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகேட்டினால், 2030ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 15 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வீதம் இறப்பார்கள் என்றும் UNDP என்ற ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட அமைப்பு அண்மையில் எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.