2012-02-15 15:33:41

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைச் சந்திக்க உறுதியான மனம் தேவைப்படுகிறது - திருப்பீடப் பேச்சாளர்


பிப்.15,2012. தற்போது இத்தாலிய ஊடகங்கள் வத்திக்கானைக் குறித்து உருவாக்கியுள்ள குழப்பமான செய்திகளை நிதானமாக, அமைதியாகக் கண்ணோக்குவது அவசியம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கானில் இருந்து கசிந்துள்ளதாகக் கூறப்படும் அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தோன்றிவருவதைக் குறித்து இத்திங்கள் மாலை செய்தியாளர்களிடம் பேசிய இயேசுசபை குரு லொம்பார்தி, இன்றையச் சூழலில் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யாரையும் ஆச்சரியப்பட வைத்துவிடுகின்றன என்பதால், அவைகளைச் சந்திக்கும் உறுதியான மனம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
பொதுவாகவே ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கும் முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவதால், சரியான ஆதாரங்கள் இன்றி, ஆழமான சிந்தனைகளும் இன்றி செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதால், இவைகளைச் சரியான கண்ணோட்டத்துடன் காணவேண்டிய பக்குவத்தை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அருள்தந்தை லொம்பார்தி கேட்டுக் கொண்டார்.
வத்திக்கானையும், திருப்பீடத்தையும் குறித்து தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பல்வேறு நேரங்களில், பல்வேறு சூழல்களில் வெளியான செய்திகள் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை லொம்பார்தி, இச்செய்திகளின் சரியான பின்னணிகளை விளக்காமல், அவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ள ஊடகங்கள் பரபரப்பை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனவே தவிர, ஊடக தர்மத்துடன் செயல்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
திருஅவையில் அடுத்தத் தலைமைப் பொறுப்பைக் குறித்து போட்டிகள் உருவாகியிருப்பதாக ஊடகங்கள் கூறிவருவதைக் குறிப்பிட்டுப் பேசிய திருப்பீடப் பேச்சாளர், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருஅவையை வழி நடத்திய திருத்தந்தையர்களின் தனிப்பட்ட வாழ்வைக் கண்ணோக்கும்போது, அவர்கள் எவ்வளவு மேன்மை உடையவர்கள் என்பதையும், போட்டி, பூசல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அல்ல என்பதையும் நாம் உணரலாம் என்று வலியுறுத்திக் கூறினார்.
தூய ஆவியின் துணை வேறு எப்போதும் இல்லாத அளவு நமக்கு இன்று தேவைப்படுகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி தன் பேட்டியின் இறுதியில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.