2012-02-14 15:00:41

ஆயர்கள், சமரசங்களைப் பேசும் அரசியல்வாதிகள் அல்ல, மக்களை வழிநடத்தும் மேய்ப்புப் பணியாளர்கள்


பிப்.14,2012. ஆயர்களாக பணியாற்றும் நாங்கள் சமரசங்களைப் பேசும் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக, மக்களை வழிநடத்தும் மேய்ப்புப் பணியாளர்கள் என்று நியூயார்க் பேராயரும், இவ்வார இறுதியில் கர்தினாலாக உயர்த்தப்பட உள்ளவருமான பேராயர் Timothy Dolan கூறினார்.
அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவின் தலைமையில் அமெரிக்க அரசு அறிவித்துள்ள நலவாழ்வு திட்டத்தில் கத்தோலிக்க மக்களின் மனசாட்சிக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக அமெரிக்க ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த எதிர்ப்பை அடுத்து, இத்திட்டத்தில் மாற்றங்களை உருவாக்கி, ஒரு சமரச முயற்சியில் ஒபாமா அரசு ஈடுபட்டது. அரசின் இந்த முயற்சிகள் இத்திட்டத்தில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் உருவாக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இத்திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஆயர் அவையின் தலைவரான பேராயர் Dolan, மனசாட்சி சார்ந்த கொள்கைகளில் சமரசங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
இச்சனிக்கிழமை கர்தினாலாக உயர்த்தப்படுவதற்கு உரோம் நகர் வந்துள்ள பேராயர் Dolan கூறிய கருத்துக்களைப் போலவே, பிலடெல்பியா பேராயர் Charles Chaput, மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் முன்னாள் பேராயர் கர்தினால் Roger Mahony ஆகியோரும் ஒபாமாவின் சமரச முயற்சிகளுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.