2012-02-13 15:07:29

திருத்தந்தை : மனிதரின் மீட்பை வெளிப்படுத்துவதற்காக இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கினார்


பிப்.13,2012. தன்னைக் குணமாக்குமாறு வேண்டிக்கொண்ட தொழுநோயாளியை இயேசு குணப்படுத்திய இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இயேசு கிறிஸ்துவின் இக்குணப்படுத்தலானது, மீட்பு வரலாறு முழுமையையும் உள்ளடக்கியுள்ளது என்ற திருத்தந்தை, மனிதரைத் தூய்மையற்றவர் என்று சொல்லி சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு இந்நோயே போதுமானதாக இருந்த அக்காலத்தில், இயேசு அந்நோயாளியைத் தொட்டுக் குணப்படுத்தினார் என்று கூறினார்.
ஒரு தொழுநோயாளி குணமான பின்னரும்கூட, அவர் சமுதாயத்தோடு எப்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே யூதக் குருக்களின் வேலையாக இருந்தச் சூழலில், ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, நீர் விரும்பினால் எனது நோயைக் குணமாக்க உம்மால் முடியும் என்று சொல்வதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
தொழுநோயாளியைத் தொடுவது யூதச்சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இயேசு அந்நோயாளியைத் தொடுவதைத் தவிர்க்கவில்லை என்றார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் இந்தச் செயலிலும் வார்த்தைகளிலும் முழு மீட்பு வரலாறும் அடங்கியுள்ளது என்ற திருத்தந்தை, இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்து உருவமிழக்கச் செய்யும் தீமையிலிருந்து நம்மைக் குணப்படுத்தி, தூய்மைப்படுத்துவதற்கான இறைவனின் விருப்பம் இவற்றில் உள்ளன என்றும் கூறினார்.
தொழுநோயாளியை இயேசு தொட்டது, இறைவனுக்கும் மனிதக் கறைகளுக்கும் இடையேயும், தூய்மைக்கும் தூய்மையற்றதன்மைக்கும் இடையேயும் இருக்கும் ஒவ்வொரு தடையும் தகர்த்தெறிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இயேசுவின் இச்செயலானது, தீமை மற்றும் அதன் எதிர்மறை சக்தியைப் புறக்கணிக்கவில்லை, ஆனால், மிகக்கொடுமையான, தொற்றிக் கொள்ளும் தன்மையுடைய நிலையிலும்கூட, தீமையையவிட இறைவனின் அன்பு உறுதியானது என்பதை அவரின் செயல் காட்டுகின்றது என்று திருத்தந்தை விளக்கினார்.
13ம் நூற்றாண்டு புனிதரான பிரான்சிஸ் அசிசியார், தொழுநோயாளரை அணைத்தது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இதன்மூலம் இப்புனிதர் பெருமை என்ற அவரது தொழுநோயிலிருந்து குணமானார், இது அவரை இறையன்புக்கு இட்டுச் சென்றது என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.