2012-02-13 15:07:44

திருத்தந்தை : இளையோர் இறைவனின் அன்பு அழைப்புக்குத் தாராளமாய்ப் பதில் சொல்வதற்கு ஏற்ற சூழல்களைத் திருஅவை உருவாக்க வேண்டும்


பிப்.13,2012. குருத்துவ அல்லது சிறப்பு அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்படுவதை உணரும் தங்களது உறுப்பினர்கள் மீது, பங்குச் சமூகங்களும், பக்த சபைகளும், திருஅவை இயக்கங்களும் மிகுந்த அக்கறை காட்டுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
வருகிற ஏப்ரல் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் 49வது உலக இறையழைத்தல் தினத்திற்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, பல இளையோர் இறைவனின் அன்பு அழைப்புக்குத் தாராளமாய்ப் பதில்சொல்வதற்கு ஏற்றச் சூழல்களை உருவாக்கித்தர வேண்டியது திருஅவையின் முக்கியமான கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இறையழைத்தல்களைப் பேணி வளர்க்கும் பணியில், நல்ல வழிமுறைகள் காட்டப்பட வேண்டும், இந்த வழிநடத்தலில், திருமறைநூல்கள் பற்றிய அறிவில் வளர்தல் மூலம் இறைவார்த்தையின் அன்பால் ஊட்டம் பெறுதல், தனியாகவும் குழுவாகவும் இடைவிடாத செபம் செய்வதில் கருத்தாய் இருத்தல் ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டுமென்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இவற்றின் மூலம், அன்றாட வாழ்வின் குரல்களுக்கு மத்தியில் இறைவனின் அழைப்பைக் கேட்கக்கூடியதாய் ஆக்க இயலும் எனவும், எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பலியும் திருநற்கருணையும் ஒவ்வோர் இறையழைத்தல் பயணத்தின் மையமாகவும் அமைய வேண்டும் எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
இறையாட்சிப் பணியில் வாழ்வின் அழகை முழுமையாகச் செலவழிக்க, திருமறைநூல், செபம், திருப்பலி ஆகியவை விலைமதிப்பில்லாத சொத்தாக இருக்கின்றன என்ற திருத்தந்தை, தலத்திருஅவைகளும், அவற்றிலுள்ள பல்வேறு குழுக்களும் உறுதியான, நன்கு தேர்ந்து தெளிந்த இறையழைத்தல்கள் வருவதற்கு உதவும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
“இறையழைத்தல்கள், இறையன்பின் கொடை” என்பது, 49வது உலக இறையழைத்தல் தினத்திற்காகத் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியின் மையப் பொருளாகும்








All the contents on this site are copyrighted ©.