2012-02-13 15:08:15

சிரியாவில் வன்முறைகள் குறித்து திருப்பீடத்தூதுவர் கவலை


பிப்.13,2012. உள்நாட்டுக்கலகங்கள் இடம்பெற்று வரும் சிரியாவின் Homs நகரில் நிலைமைகள் மிகவும் சீர்கேடடைந்து வருவதுடன், அப்பாவிப் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் Mario Zenari.
வன்முறைகள் இடைவெளியின்றி தொடர்ந்து கொண்டிருப்பதால் Homs நகர் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த பேராயர், மருந்து, உணவு, மருத்துவ வசதி, உறைவிடங்கள் ஆகியவை இல்லாத நிலையில் துன்புறும் மக்கள், இறந்தவர்களை புதைக்கக்கூட வெளியில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என கவலையை வெளியிட்டார்.
ஐநாவின் உதவியோடு அரபு நாடுகளின் கூட்டமைப்பு, சிரியாவில் அமைதியைக் கொணர எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டிய பேராயர் Zenari, வன்முறைகளை தடுத்து நிறுத்த சர்வதேச சமுதாயத்தின் முயற்சிகள் இன்றியமையாதவை என்பதையும் வலியுறுத்தினார்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானத்தைத் தொட்டு வருகின்றன என்ற அவர், இதனிடையே, ஆள்கடத்தல்கள் மற்றும் அச்சுறுத்தி பணம்பறித்தல் போன்ற நிகழ்வுகளும் ஆழ்ந்த கவலை தருவதாக உள்ளன என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.