2012-02-13 15:08:44

ஆள் கடத்தல்களால் சூடான் இளையோர் அச்சத்தில் வாழ்கின்றனர் என்கிறார் ஆயர்


பிப்.13,2012. புதிய இராணுவ வீரர்கள் தேவைப்படும் தீவிரவாதக் குழுக்கள், சிறுபான்மை சமுதாய இளைஞர்களைக் கடத்திச் செல்வதால், கிறிஸ்தவ இளையோரிடையே அச்சம் பரவிக்கிடப்பதாக சூடானின் Khartoum ஆயர் கவலையை வெளியிட்டுள்ளார்.
பெரும்பான்மை கிறிஸ்தவ இளைஞர்கள் தென் சூடான் பூர்வீக இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால், அவர்களை இரவிலும் வீடு புகுந்து கடத்திச் செல்வது தீவிரவாத குழுக்களின் அத்து மீறியச் செயல்பாடாக உள்ளது என்ற துணை ஆயர் Daniel Adwok Kur, கடத்தப்படுவோம் என்ற அச்சத்தினால் இளையோர் கோவில் வழிபாடுகளுக்கு வருவதையே தவிர்த்து வருகின்றனர் என்றார்.
அண்மையில் Joseph Makwey, Sylvester Mogga, என்ற இரு குருக்கள் கடத்தப்பட்டு, இரு வாரங்களாக மறைவான இடத்தில் வைக்கப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்ட பின்னர், உயர் அதிகாரிகளின் பெருமுயற்சிகளுக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்ட ஆயர், தீவிரவாதக்குழுக்களின் செயல்பாடுகளைத் தடுக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.
ஆள்கடத்தல்களின் எண்ணிக்கை சூடானில் அதிகரித்து வருவதால், வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என மேலும் கூறினார் ஆயர் Adwok Kur.








All the contents on this site are copyrighted ©.