மேற்கு ஆப்ரிக்காவில் எலக்ட்ரானிக் கழிவுகளின் ஆபத்து குறித்து ஐ.நா எச்சரிக்கை
பிப்.11,2012. மேற்கு ஆப்ரிக்காவில் அதிகரித்து வரும் எலெக்ட்ரானிக் கருவிகளின் கழிவுகள்
நலவாழ்வுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் பெரும் ஆபத்துக்களை முன்னிறுத்துகின்றன என்று
ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் வெளியேற்றப்படும்
இந்த இ-கழிவுகளில் ஏறக்குறைய 85 விழுக்காடு, வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் எலெக்ட்ரானிக்
கழிவுகள் என்று கூறும் இவ்வறிக்கை, தொழிற்சாலை நாடுகள் அனுப்பும் பயன்படுத்தப்பட்ட கருவிகளால்
இந்த ஆபத்து மேலும் மோசமடைந்துள்ளது என்றும் கூறுகிறது. தொழிற்சாலை நாடுகள் அனுப்பும்
பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரானிக் கருவிகள், மீண்டும் பயன்படுத்தப்பட முடியாதவை, அவை தூக்கி
எறியப்பட வேண்டும் என்ற நிலையையே பல நேரங்களில் நிரூபித்துள்ளன என்றும் ஐ.நா.அறிக்கை
தெரிவிக்கிறது. ஆப்ரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வெளியேறும் எலெக்ட்ரானிக்
கருவிகளின் கழிவுகள், சரியாகக் கையாளப்படுவது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும்,
பசுமைப் பொருளாதாரத்தின் வளங்களை நன்கு பயன்படுத்தவும் உதவும் என்றும் ஐ.நா.சுற்றுச்சூழல்
திட்ட இயக்குனர் Achim Steiner கேட்டுக் கொண்டுள்ளார். பெனின், ஐவரி கோஸ்ட், கானா,
லைபீரியா, நைஜர் ஆகிய ஆப்ரிக்க நாடுகள், கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக, ஆண்டுதோறும் 6 இலட்சத்து
50 ஆயிரம் முதல் பத்து இலட்சம் டன்கள் வரையிலான இ-கழிவுகளை வீடுகளிலிருந்து வெளியேற்றி
வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.