2012-02-11 15:43:31

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு பார்கின்சன் (Parkinson’s) நோய் இருந்ததென்று 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகள் இந்த நோயோடு அவர் தன் பணிகளைத் தொடர்ந்தார். இந்த நோயில் அவர் அடியெடுத்து வைத்ததும், உலகில் பல்வேறு நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே இணைத்துக்கொண்டார். 1992ம் ஆண்டு அவர் உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று இந்த உலகதினம் கொண்டாடப்படுகிறது. லூர்து நகருக்குச் செல்லும் கோடான கோடி நோயாளர்கள் அன்னை மரியாவின் பரிந்துரையால் நலமடைந்துள்ளனர் என்பது உலகம் அறிந்த உண்மை என்பதால், இந்த நாளை அருளாளர் இரண்டாம் ஜான்பால் தேர்ந்தார். இந்தச் சனிக்கிழமை, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளை நாம் கொண்டாடியபோது, 20வது உலக நோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம்.

நோயாளருக்கென ஒரு தினமா? என்று நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும் எதிர்மறையான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் உருவாவதால், நாம் இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். அன்னையர் தினம், தந்தையர் தினம், விரைவில் நாம் கொண்டாடவிருக்கும் காதலர் தினம் என்று பல்வேறு தினங்களை நாம் கொண்டாடுவது எதற்கு? அந்த ஒரு நாளிலாவது அந்தக் கருத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், என்ன பரிதாபம்! இத்தினங்களுக்கே உரிய உயர்ந்த, ஆழமான பல எண்ணங்களிலிருந்து நம்மைத் திசைத்திருப்பும்வண்ணம் அன்னையர், தந்தையர், காதலர், நண்பர்கள் என்ற பல தினங்களை வர்த்தக உலகம் அபகரித்துக் கொண்டுவிட்டது. வர்த்தக உலகம் இத்தினங்களைப் பரிசுப் பொருட்களால் குவித்து, நம் எண்ணங்களையும், கண்ணோட்டத்தையும் குருடாக்கிவிட்டது.
நல்ல வேளை, உலக நோயாளர் தினத்தை வர்த்தக உலகம் இன்னும் அபகரிக்கவில்லை. அபகரிக்கவும் தயங்கும். ஏனெனில், இந்த தினத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாதே! வர்த்தக உலகின் ஆதிக்கம், ஆர்ப்பாட்டம் இவை ஏதும் இல்லாத இந்த நாளை நமக்கு வழங்கி, நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர் மீது திருப்பியுள்ளதற்காக நாம் தாய் திருஅவைக்கும், சிறப்பாக, அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

உலக நோயாளர் தினத்தை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் கடைபிடித்த மற்றொரு முக்கியமான நாளும் நமக்கு நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி அல்லது அதற்கு நெருக்கமாக வரும் ஞாயிறன்று உலகத் தொழுநோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 29, ஞாயிறன்று நாம் உலகத் தொழுநோயாளர் தினத்தைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தியின் முதல் மூன்று இறைவசனங்களை நாம் கேட்போம்:
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இப்போது நாம் கேட்ட இந்த வார்த்தைகளை நற்செய்தி என்று உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்ச்சியைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நல்ல செய்திதான். அந்த வார்த்தைகளைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இந்த நற்செய்தியில் இயேசுவை அணுகிய தொழுநோயாளரைக் குறிப்பிடும் வார்த்தைகள் மரியாதை கலந்த வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தொழுநோயாளருக்கு மரியாதை தருவதைப்பற்றிப் பேசுவதில் என்ன பெரிய வியப்பு என்று உங்களில் சிலர் கேட்கலாம். நான் விளக்க முயல்கிறேன்.
இந்த ஞாயிறு நற்செய்தியை நான் வாசித்ததும் என் மனம் இருபதாண்டுகளுக்கு முன் சென்றது. அப்போது நாம் பயன்படுத்திய விவிலியத்தில் தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட நமது தமிழ் விவிலியத்தில் இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால் நான் சொல்லும் மரியாதை உங்களுக்குக் கட்டாயம் விளங்கும். இதோ இப்பகுதிகளை இணைத்து கேட்போம்:

1986 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்என்று வேண்டினான். இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி அவனைத் தொட்டு, “விரும்புகிறேன், குணமாகுஎன்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.

1995 விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இது
மாற்கு நற்செய்தி 1: 40-42
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

இந்த இரு பகுதிகளில் காணப்படும் வேறுபாடுகளை இந்நேரம் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். பழைய விவிலியப் பதிப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளியை அவர், இவர் என்று குறிப்பிடுகிறோம். தொழுநோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதையை வழங்குவது நாம் அண்மையில் பின்பற்றும் ஒரு அழகான பழக்கம்.
தொழுநோய், தொழுநோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில் தொழுநோயாளி என்ற வார்த்தைக்குப் பதில் குஷ்டரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக இப்போது ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது, இந்த நோய் உடையவர்களை மனிதப் பிறவிகளாகவே நாம் பார்க்கவில்லை. இன்றும் இந்த நிலை பல இடங்களில் தொடர்வது வேதனைக்குரிய ஒரு போக்கு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழு நோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆங்கிலத்தில் பல வார்த்தைகளுக்கு நாம் மாற்று கண்டுபிடித்திருக்கிறோம். Servant என்ற சொல்லுக்கு domestic help, அல்லது domestic employee என்றும் handicapped என்ற சொல்லுக்கு physically challenged அல்லது diffrently abled எனவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது என்ன வெறும் வார்த்தை விளையாட்டுக்கள்தானே என்று நம்மில் சிலர் நினைக்கலாம்.
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயினால் உருவாகும் காயங்களை விட, வார்த்தைகளால் உருவாகும் காயங்கள் மிக ஆழமானவை, ஆறாதவை என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்., உணர்ந்தும் இருக்கிறோம். வார்த்தைகளை மாற்றும்போது எண்ணங்களும் மாறும் என்பது உண்மை. ஒருவரைக் குஷ்டரோகி என்று சொல்வதற்குப் பதில், அவர் ஒரு நோயாளி என்று சொல்லும்போதே, அவரைப் பற்றிய நமது எண்ணங்களும் உணர்வுகளும் வேறுபடும். அவரைப் பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும். நாம் வார்த்தைகளில் காட்டும் மரியாதை வெறும் வாயளவு மந்திரங்களா அல்லது உள்ளத்தின் உண்மை உணர்வுகளா என்பதையும் நாம் அலசிப் பார்க்கலாம். அதேபோல், சாதிய மடமை புரையோடிப் போயிருக்கும் இந்திய சமுதாயத்தில் ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்குப் பிறப்பிலேயே முத்திரை குத்தி விடுகிறோம். அதனால் அவர்களை பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவைகளில் வேறுபாடுகள் காட்டுவது இந்திய சமுதாயத்தின் சாபக்கேடு. இந்தச் சமுதாயக் குற்றத்திற்கும் இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. ‘கடோஷ்’ (Kadosh) என்ற எபிரேயச் சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமானதாக, புனிதமானதாகக் கருதப்பட்டன. இந்த அடிப்படையில், நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது.
லேவியர் நூல் 13: 1-2, 44-46
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

இஸ்ரயேல் மக்களிடையே தொழு நோயாளிகளைப் பற்றிய எண்ணங்களும் அவர்கள் நடத்தப்பட்ட முறைகளும் மிகக் கொடுமையானவை. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வரவேண்டும். இந்த மணிசப்தம் கேட்டதும், எல்லோரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்ப்போம். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால் கல்லால் எறியப்பட்டு சாகவும் நேரிடும். இதெல்லாம் தெரிந்திருந்தும், இந்தத் தொழுநோயாளி இயேசுவிடம் வருகிறார்.
இயேசு தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளைக் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளியைத் தொடுகிறார். இயேசுவின் இந்தச் செயல் சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியும் குணமானார். இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாகி இருக்கவேண்டும்.

ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் உள்ள தொழுநோய் மருத்துவமனை ஒன்றில் ஒரு மாதம் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு பணி செய்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் மாலை தொழுநோய் கண்ட குழந்தைகளுடன் விளையாடும் சூழ்நிலை. அந்த நேரத்தில் ஒரு குழந்தை என்னிடம் ஒரு மிட்டாயை நீட்டினாள். வாங்குவதா வேண்டாமா என்ற போராட்டம். தைரியமாக வாங்கினேன். பைக்குள் வைத்துக் கொண்டேன். பின்னர் அறைக்குள் சென்று அதை குப்பைத் தொட்டியில் போடலாமா என்ற போராட்டம். அந்த போராட்டத்தையும் வென்று, அந்த மிட்டாயைச் சாப்பிட்டேன். இது ஒரு சின்னப் போராட்டம்தான். இருந்தாலும் என்னுடைய ஒரு மாத பணி அனுபவத்தில் ஓர் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். இந்த நோய் பற்றிய எண்ணங்களில் சின்னதாக எனக்குக் கிடைத்த ஒரு குணம் என்று சொல்லவேண்டும்.
தொழுநோய் பற்றி எனக்குள்ளே இருந்த பல பயங்கள் இந்தப் பணியால் மாறும் என்ற நம்பிக்கையுடன் அங்கு சென்றேன். பல மாற்றங்கள் நடந்தது உண்மை. இருந்தாலும், ஆழ்மனதில் இன்னும் சில பயங்கள் நீங்காமல் இருக்கின்றன என்பதும் உண்மை.

மூன்றாவது வாரமாக இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டு வருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதை பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். இயேசுவின் குணமளிக்கும் புதுமையை அடுத்த வாரமும் நாம் தொடர்ந்து சிந்திப்போம்... மற்றொரு கோணத்திலிருந்து. அதுவரை...
தொழு நோய் பற்றியும், நாம் வாழும் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் AIDS நோய் பற்றியும் நம் எல்லாருக்கும் தெளிவான எண்ணங்கள் உண்டாகவும் இதனால் நாம் அனைவரும் நலம் பெறவும் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.