2012-02-10 14:39:01

பிப் 10, 2012. கவிதைக் கனவுகள்.......... எதிர் வினைகள்.


இயற்கை எனும் தேவதை,
அரவணைக்க மட்டுமே தெரிந்தவள்,
அடித்துக் கொல்வதில்லை யாரையும்.

பூவின் மொழியை காற்றில் தருவாள்
புல்நுனியில் பனித்துளி பருகுவாள்
தேனியின் மயிர்க் கால்களில் மகரந்தம் சுமப்பாள்
ஓடையின் வெண்நுரையில் புனிதம் காட்டுவாள்
மழைத்துளிக்காய் கரிசல் பூமியை காத்திருக்க வைப்பாள்
வேற்றுமைகளில் ஒற்றுமை தருபவள் அவள்.
அவள் அமைதியாய்ப் போனதால்
அடங்கிப் போனதாய் அர்த்தம் கண்டது நம் குற்றம்.
அடக்கப்பட்ட அநியாயங்கள்
வெடித்துச்சிதறுவது இயற்கையே, பேரிடரே.
வலி சேரும்போது வலிமையும் அதிகரிக்கிறது.
சுவரை முத்தமிட்ட பந்து திரும்பித்தான் வரும்.
நம்மைத் தண்டிக்க நாமே பயன்படுத்தும்
மறைமுகக் கருவி இது.
உணர்வு புரியா உறவில்
ரணம், சதா ரணமே.

குளம் வற்றினால் கொக்கின் கவலை
அடுத்த குளம் காணும் வரைதான்.
காரணம் தேடுவது அதன் பணியல்ல.
அந்த பாராமுகத்தை இயற்கையின் மடிதலில்
நாம் தொடரும் வரை
பேரிடர்களும் தொடர்கதைதான்.








All the contents on this site are copyrighted ©.