2012-02-10 15:04:45

ஆப்ரிக்காவில் கடும் ஏழ்மையில் துன்புறும் மக்களின் துயர் துடைக்குமாறு உலகினருக்குத் திருத்தந்தை அழைப்பு


பிப்.10,2012. ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் கடும் ஏழ்மையில் வாடும் மக்களின் துயர் துடைப்பதற்குச் சர்வதேச சமுதாயம் தீவிர முயற்சிகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சஹாராவையடுத்த பகுதிக்கான, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அமைப்பின் 25 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சாஹெல் பகுதியில் வறுமையை ஒழிப்பதற்கு முயற்சித்து வரும் திருஅவை உறுப்பினர்களுக்குத் தனது ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் கூறினார்.
இவ்வமைப்பானது, கிறிஸ்தவப் பிறரன்பின் அடையாளமாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவின் அன்பு, மதம், இனம், கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து எல்லாருக்கும் முக்கியமானது என்பதற்கு இவ்வமைப்பு சான்றாக இருக்கின்றது என்றும் கூறினார்.
தொடர் மோதல்களையும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் கொண்டுள்ள ஆப்ரிக்கா, தற்போது, திருஅவைக்கு நம்பிக்கையின் கண்டமாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
28 ஆண்டுகளாக இயங்கி வரும் இவ்வமைப்புக்குப் புதுப்பித்தல் அவசியம் என்றும், இதில் பணிசெய்பவர்கள், அப்பகுதியில் திருத்தந்தையின் கருவிகள் போன்று செயல்படுவதால், அவர்களுக்குக் கிறிஸ்தவக் கல்வியும், கிறிஸ்தவப் பயிற்சியும் அளிக்கப்படுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
1980ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஆப்ரிக்காவின் Burkina Faso வுக்கு திருப்பயணம் மேற்கொண்ட பின்னர், வறுமை, வறட்சி, தரிசு நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் துன்புறும் அப்பகுதி மக்களுக்கு உதவுவதற்கென இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.