2012-02-09 15:52:18

அருட்பணியாளர்கள் துணிவுடனும், விழிப்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் - வத்திக்கான் உயர் அதிகாரி


பிப்.09,2012. மக்களை வழிநடத்தும் பணியில் ஈடுபடும் அருட்பணியாளர்கள் துணிவுடனும், விழிப்புடனும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற மையக்கருத்தில் உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக் கழகத்தில் இவ்வியாழனன்று நிறைவுற்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக, இப்புதன் மாலைத் திருப்பலியில், திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் தலைவர் பேராயர் Fernando Filoni மறையுரையாற்றியபோது, இவ்வாறு கூறினார்.
அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Filoni, திருஅவையைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அகில உலக திருஅவை ஆர்வம் கொண்டுள்ளது என்பதை இக்கருத்தரங்கு உணர்த்துகிறது என்று கூறினார்.
அகில உலகத் திருஅவை அருட்பணியாளர்கள் ஆண்டைக் கொண்டாடிய வேளையில் குருக்களின் இந்தத் தவறு அதிக அளவில் வெளிச்சத்திற்கு வந்ததைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எடுத்துரைத்து, குருக்கள் செய்த இந்தப் பாவத்தால் திருஅவை என்ற தாயின் முகம் பெரிதும் அழுக்கடைந்தது என்றும், தாழ்ச்சியுடன் இக்கறையை நீக்க அனைவருமே இணைய வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியதை பேராயர் Filoni தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் 110 மறைமாவட்டங்களின் பிரதிநிதிகள், அகில உலக துறவியர் சபைகளின் 30 தலைவர்கள் உட்பட 200க்கும் அதிகமான திருஅவைத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு இவ்வியாழனன்று நிறைவடைந்தது.







All the contents on this site are copyrighted ©.