2012-02-09 15:57:09

அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் மணிலா பேராயர் Luis Antonio Tagle


பிப்.09,2012. பாலியல் வன்முறை குற்றங்களில் குருக்கள் ஈடுபட்டதால் திருஅவை சந்தித்த பிரச்சனை இதுவரை ஆசியத் திருஅவையில் பெருமளவில் உணரப்படவில்லை என்று மணிலா பேராயர் Luis Antonio Tagle கூறினார்.
கிரகோரியன் பல்கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் அகில உலகத் திருஅவை கருத்தரங்கில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் Tagle, இப்பிரச்சனை மேற்கத்திய நாடுகளில் மட்டும் இல்லை என்றும், ஆசிய நாடுகளிலும் ஆங்காங்கே உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், சிறார் மற்றும் இளஞ்சிறார் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது ஆசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டிய பேராயர் Tagle, ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களால் இந்தக் குற்றம் இன்னும் அதிகமாகியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
அகில உலகத் திருஅவையின் ஒவ்வொரு மறைமாவட்டமும் இந்தப் பிரச்சனையைக் கையாளும் வழிகளை உருவாக்குவதற்கு உதவியாக இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது என்றும், ஆசியத் திருஅவையைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் திருஅவைகள் இந்த வழிமுறைகளை வகுத்துள்ளன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.