2012-02-08 15:40:20

பிப்ரவரி 08, 2012. கவிதைக் கனவுகள்............. கொலையிலும் கருணை


'கொன்றால் பாவம் தின்றால் போச்சு'
கொலைகளையெல்லாம் ஜீரணிக்க முடிந்தால்
ஒரு நியாயத்திற்குள் எல்லாம் அடங்கிவிடும்.

யாரை எப்போது கொல்வது என யார் முடிவு செய்வது?
திருத்தவே முடியாதவன் என எண்ணி தூக்கில் கொலை.
தேவையேயில்லை எனும் நிலையில் கருவில் கொலை.
குணமேயில்லை எனக் கருதி கருணைக் கொலை.
இதையெல்லாம் தாண்டி வந்தவர்கள் நாமா?
நம்மைத் திருத்தவிட்டிருக்கிறோமா?
நாம் இந்த நாட்டிற்கு அத்தியாவசியத் தேவையா?
நாம் குணப்பட்டுவிட்டோமா?
எப்போது?

கருணையின் பெயரால் ஒருகொலையா?
தாயின் பெயரால் பிள்ளைக்கறியா?
ஆண்டவன் பெயரால் நரபலி,
கருணை பெயரால் உயிர்பலி.
என்ன உலகமடா இது?

யார் தேவை, யார் தேவையில்லை,
யார் செல்வது, யாரை வரவிடுவது,
இதை யார் முடிவு செய்வது?
தான் வாழ விரும்பவில்லை என
அவனே பறித்தால் அது தற்கொலை.
இவன் பிழைக்க மாட்டான் என கண்ணை மூடிக்கொண்டு
அவன் கண்ணை மூடினால் அது கொலை.
இதில் கருணைக்கொலை எங்கிருந்து வந்தது?
கருணை எனும் புனிதத்தை கேவலப்படுத்தாதீர்கள்.
வலியில்லா மரணமாம். மடிந்து போவதற்கு உதவியாம்.
துன்பத்திலிருந்து மீட்பாம்.
சட்ட அங்கீகாரம் பெற்று விட்டால்
உயிர்பறிப்புக் கூட புனிதமாகிவிடுமா?

ஒருவரின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு மரணம் வருவது
இங்கு மட்டும் தான்.








All the contents on this site are copyrighted ©.