2012-02-08 16:00:50

பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களுக்குச் செவிமடுப்பதற்கு திருத்தந்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு


பிப்.08,2012. திருஅவைப் பணியாளர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களுக்கு தகுந்த முறையில் செவிமடுப்பதற்கு திருத்தந்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று Marie Collins என்ற பெண்மணி கூறினார்.
'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி' என்ற மையக்கருத்துடன் கடந்த திங்கள் முதல் இவ்வியாழன் வரை உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இக்கருத்தரங்கில் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் சார்பில் உரையாற்றிய Marie Collins, திருப்பணியாளர் ஒருவரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்.
இவர் இக்கருத்தரங்கின் அமர்வில் உரையாற்றிய பின், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
2005ம் ஆண்டு திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மால்டா என்று பல்வேறு நாடுகளுக்குத் திருப்பயணங்கள் மேற்கொண்ட பொது, அந்தந்த நாட்டில் இவ்வன்முறைகளுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து அக்கறையுடன் அவர்களுடன் உரையாடியது தனக்குப் பெரிதும் ஆறுதலைத் தந்தது என்று Marie Collins கூறினார்.
திருஅவையின் அனைத்து ஆயர்களும் திருத்தந்தையின் இந்த வழியைப் பின்பற்றினால் வன்முறைகளுக்கு ஆளானவர்கள் திருஅவையில் தொடர்ந்து வாழும் சக்தி பெறுவார்கள் என்று Marie Collins வலியுறுத்திக் கூறினார்.
உலகின் 110 ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள் மற்றும் 30 துறவு சபைகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த முக்கிய கருத்தரங்கு இவ்வியாழனன்று நிறை பெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.