2012-02-08 16:00:15

ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருக்க திருஅவை முயலும் - இந்திய கத்தோலிக்க ஆயர்கள் உறுதிமொழி


பிப்.08,2012. குரல் எழுப்ப முடியாமல் ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருக்க திருஅவை முயலும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
இம்மாதம் முதல் தேதியிலிருந்து பெங்களூருவில் கூடியிருந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக்கூட்டம் இப்புதனன்று நிறைவுற்றபோது, அங்கு கூடியிருந்த ஆயர்கள் விடுத்த இறுதி அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
உலகமயாக்கல் வழியாக இந்தியா பொருளாதாரத்திலும், தொழில் நுட்பத்திலும் வெகுவாக முன்னேறியிருப்பதாகத் தோன்றினாலும், வளமான எதிர்காலம் என்பது, பெரும்பாலான மக்களின் ஏக்கமாகவே இன்னும் விளங்குகிறது என்று ஆயர்களின் இறுதி அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வாழும் வறியோரின் அவல நிலைக்கு திருஅவை தகுந்த அளவில் கவனம் செலுத்தும் என்றும், அளவுக்கு மீறிய நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனித வாழ்வு சீர்குலைவதைத் தடுக்க எளிமையான வாழ்வை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியத் திரு அவையில் காணப்படும் பாகுபாடுகளையும் ஊழல் முறைகளையும் முற்றிலும் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆயர்களின் உறுதிமொழி எடுத்துரைக்கிறது.
கத்தோலிக்கர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது மட்டும் குரல் எழுப்பாது, எங்கெங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் திருஅவை ஈடுபட்டு அவ்வுரிமைகளுக்காகப் போராடும் என்றும் ஆயர்களின் இவ்விறுதி அறிக்கை கூறுகிறது.
இந்தியத் திருஅவையின் பணியாளர்களும், நிறுவனங்களும் வன்முறைகளுக்கு உள்ளானபோதிலும், ஏழைகள் மத்தியில் தொடர்ந்து உழைப்பதில் திருஅவை உறுதியாக இருக்கும் என்று பெங்களூருவில் கூடியிருந்த 161 ஆயர்களும், 20 ஆயர் பேரவை அதிகாரிகளும் இணைந்து விடுத்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.