2012-02-07 15:59:19

திருத்தந்தை : தவக்காலத்தில் பிறரின் தேவைகளுக்கு மிகுந்த அக்கறை காட்ட அழைப்பு


பிப்.07,2012. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குப் "பாதுகாவலர்களாக" இருக்குமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 22ம் தேதி திருநீற்றுப் புதனன்று ஆரம்பிக்கும் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அன்புக்கும் விசுவாச வாழ்வுக்கும் நற்சான்றுகளாய் இருப்பதற்குச் சவால் விடுக்கப்படும் இவ்வுலகில், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே உடலின் உறுப்பினர்கள் என்ற உணர்வில், பிறரன்பு, சேவை, நற்பணி ஆகியவற்றில் ஒருவர் ஒருவருக்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சகோதரத்துவம் சமூகத்தன்மை கொண்டது என்பதால், இது, பிறரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சகோதரத்துவத் திருத்தத்திற்கு இட்டுச் செல்லும் ஆன்மீக வாழ்க்கை மீது கருத்தாய் இருப்பதிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலுள்ள, “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக(எபி.10,24)” என்ற பகுதியைத் தலைப்பாக வைத்து தவக்காலச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, தனியாள் மற்றும் சமூகத்தின் விசுவாசப் பயணத்தில் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிறர்மீது கருத்தாய் இருப்பதென்பது, பிறரின் உடல், நன்னெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நன்மையான அனைத்தையும் செய்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்காலத்திய கலாச்சாரம், நன்மை, தீமை இவை பற்றிய உணர்வை இழந்து விட்டது போல் தெரிகிறது, எனினும், நன்மை உலகில் இருக்கிறது, அது தீமையை மேற்கொண்டுவிடும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிறரிடம் பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, பிறரின் நன்மையை விரும்பி, அதற்காக உழைப்பது என்ற திருத்தந்தை, தீமையின் முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ சகோதரத்துவத் திருத்தம், எப்பொழுதும் அன்பையும் இரக்கத்தையும் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ள திருத்தந்தை, சகோதரத்துவத் திருத்தம் நாம் அனைவரும் சேர்ந்து தூய்மையான வாழ்வு நோக்கிப் பயணம் செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இத்தவக்காலச் செய்தியை, “Cor Unum” என்ற திருப்பீடத்தின் பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Robert Sarah, அவ்வவையின் செயலர் பேருட்திரு Giampietro Dal Toso, நேரடிப் பொதுச்செயலர் பேருட்திரு Segundo Tejado Munoz ஆகியோர் இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டனர்.







All the contents on this site are copyrighted ©.