2012-02-06 15:28:47

திருத்தந்தை : நோயின் வேதனையைத் தாங்கிக் கொள்ள இறையன்பு உதவுகிறது


பிப்.06,2012. இயேசு கிறிஸ்துவின் அன்பில் நம்பிக்கை வைப்பதன் மூலம், நீண்ட கால நோயின் வேதனைகளைத் தாங்கிக் கொள்ள இயலும் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தமது வானகத்தந்தையிடமிருந்து வந்த அன்பின் வல்லமையால் இயேசு தீயவனை எதிர்கொண்டது போல, பிணியாளியும், இறையன்பில் தனது இதயத்தைப் பதியச் செய்வதன் மூலம், நோயின் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றவர்களுக்கு இறைவன் ஆழ்ந்த அக அமைதியைக் கொடுப்பதால் அவர்கள் இத்துன்பங்களைத் தாங்கிக் கொள்கின்றார்கள் என்று நமக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகம் பனியால் மூடப்பட்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் கடும் குளிரில் இஞ்ஞாயிறு நண்பகலில் அங்கு கூடியிருந்த ஏறக்குறைய பத்தாயிரம் விசுவாசிகளிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை இயேசு குணமாக்கியதையும், பேய்களை ஓட்டியதையும் உள்ளடக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை வைத்துச் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, இயேசு தமது பொதுவாழ்வில், போதனைகளோடு, பல்வேறு பிணிகளிலிருந்தும் விடுதலை அளிப்பதை தமது முக்கிய நடவடிக்கைகளாகக் கொண்டிருந்தார் என்பதை நான்கு நற்செய்தியாளர்களுமே எவ்வாறு விளக்கியுள்ளனர் என்றும் கூறினார்.
இவ்வுலகிலும், மனிதரிலும் தீமையின் அடையாளமாக நோய் நோக்கப்படும் வேளை, கிறிஸ்துவின் குணப்படுத்தும் செயல்கள், இறையாட்சி அண்மையில் உள்ளது என்பதைக் காட்டுகின்றன எனவும், அவரது மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிடைத்த அவரது வெற்றியின் முன்சுவையாகவும் அவை இருக்கின்றன எனவும் கூறினார் திருத்தந்தை.
நோய் விரைவில் குணமாகாமல், அதன் வேதனை நீடித்தால் பிணியாளிகள் தனிமைப்படுத்தப்படுவர், அவர்கள், சோர்வுக்கு உள்ளாகி, மனிதத்தையும் இழக்கக்கூடும் என்றுரைத்த திருத்தந்தை, அண்மைப் பத்தாண்டுகளில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தகுந்த மருந்துகளை வழங்கி வருகிறது என்றும் சுட்டிக் காட்டினார்.
மரணத்தை எதிர்நோக்கும்போதுகூட, மனிதனால் இயலாததை விசுவாசம் இயலக்கூடியதாக ஆக்கும் என்பதற்கு அருளாளர் கியாரா பதானோவின் வாழ்க்கை சான்றாக உள்ளது எனவும் குறிப்பிட்டு, நோயாளிகளுக்கு மனிதருடைய அரவணைப்பு தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
பிப்ரவரி 11ம் தேதியான வருகிற சனிக்கிழமை லூர்து அன்னை திருவிழா. அன்று, உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. இயேசு பிணியாளரைக் குணமாக்குகிறார், அவரால் குணமாக்க முடியும் என்பதில் இத்தினத்தில் நம்பிக்கை வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டு மனிதத் துன்பம் எப்பொழுதும் அன்பால் சூழப்பட்டதாக இருக்கட்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.