2012-02-03 15:51:06

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான பிணைப்பு, துறவு வாழ்வின் பண்பை விளக்குகின்றது


பிப்.03,2012. சாட்சிய வாழ்வு வாழ்வதற்கும், நற்செய்தி அறிவிப்புக்கும், விசுவாச ஆண்டு துறவிகளுக்குச் சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
அனைத்துலக துறவியர் தினமான பிப்ரவரி 2ம் தேதி இவ்வியாழன் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவியருடன் சேர்ந்து மாலை திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற்றிய திருத்தந்தை, வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டு, அனைத்து விசுவாசிகளுக்கும், சிறப்பாக, துறவியருக்கு, அகப்புதுப்பித்தலுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது என்று கூறினார்.
இறைவனோடு தனக்குள்ள உறவை வலுப்படுத்துவது, ஒருவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும் எனவும், இது, துறவற வாழ்க்கையின் தன்மையை மிக அதிகமாக விளக்குவதாகவும் இருக்கின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.
உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இருபால் துறவியரின் விசுவாசத்தின் சான்றுக்கு இந்நாள் அதிகக் கவனம் செலுத்துகின்றது என்று மறையுரையாற்றிய அவர், துறவிகள் தங்களையே இறைவனுக்குக் கையளிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டுவதாக இத்தினம் அமைகின்றது என்றும் தெரிவித்தார்.
ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள், நம்பிக்கை, பற்றுறுதி, பிறரன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, மக்களை இறைவனிடம் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
துறவிகள் தங்களது சபைகளின் தனிவரம் மூலம், திருஅவைக்கும் இன்றைய உலகுக்கும் நம்பத்தகுந்த சாட்சிகளாகத் திகழுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, திருஅவையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், விசுவாசத்திற்குச் சான்றுகளாக இருக்கவும் அவர்களை வலியுறுத்தினார்.
இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது, கிறிஸ்துவே உலகின் ஒளி என்பதை வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவே உலகின் ஒளி என்ற கருத்தானது கிறிஸ்மஸ் விழாக்களில் வெளிப்படுத்தப்பட்டு திருக்காட்சி விழாவில் நிறைவை எட்டியது என்றும் கூறினார்.
பிப்ரவரி 2ம் தேதியன்று இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வு சிறப்பிக்கப்படுகின்றது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், இந்நாளை, அனைத்துலக துறவியர் தினமாக அறிவித்து, 1997ம் ஆண்டில் முதன் முறையாக இத்தினத்தைச் சிறப்பித்தார்.







All the contents on this site are copyrighted ©.