2012-01-31 15:43:38

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 101 பாகம் 5


RealAudioMP3 எந்த ஒரு நிகழ்வுக்குமே பகுப்பாய்வு மிக அவசியம். நாம் செய்து முடித்த செயலைப் பகுப்பாய்வுச் செய்து பார்க்கும் போதுதான், நிறை, குறைகளைத் தெரிந்து கொண்டு நிறைகளைத் தொடரவும், குறைகளைக் களையவும் முடியும். தாவீது தன் வாழ்வை, தன் ஆட்சியைப் பகுப்பாய்வு செய்து பார்த்தார். அவர் குறைகள் எனக் கண்டறிந்தவற்றைக் களைய விரும்பினார். அதற்கான உறுதிமொழிகளை எடுத்தார். இதைத்தான் திருப்பாடல் 101 நமக்குச் சொல்கிறது என கடந்த நான்கு வாரங்களாக சிந்தித்து வருகிறோம். இன்று இத்திருப்பாடலின் ஐந்தாவது சொற்றொடரின் பிற்பகுதியைச் சிந்திப்போம். இதோ ஐந்தாவது சொற்றொடரின் பிற்பகுதி:
கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
தாவீது மன்னன் தன் அரசு சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில், அதில் செருக்குற்ற மனிதர்கள் இருக்கக்கூடாது என நினைத்தார். ஏனெனில், செருக்குற்ற மனிதர்கள் கடின உள்ளமுடையவர்கள். கடின உள்ளமுடையவர்கள் சிறந்த ஆட்சிக்கு தகுதியுடையவர்கள் அல்ல. அவர்களது செருக்குள்ள குணம் அரசில் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், பகைமையையும்தான் உருவாக்கும். வலிமையுடையவர்கள் ஏழைகளை புழுக்களைப் போல பார்த்தார்கள். அவர்களை மனிதர்களாக மதிக்கவில்லை. இதைப் பார்த்தத் திருப்பாடல் ஆசிரியர் தாவீதின் உள்ளம் கொதித்தது. இவர்களின் மனப்பாங்கும், பழக்க வழக்கங்களும் தாவீது மன்னனுக்கு எரிச்சலூட்டியது. செருக்குள்ளவர்கள் நிலையான, நிம்மதியான ஆட்சிக்கு ஏற்றவர்கள் அல்ல. எனவே செருக்குள்ளவர்கள் எவரும் தன் ஆட்சிப்பீடத்தில் இருக்கக் கூடாது என முடிவு செய்தார்.

செருக்கு என்பது என்ன?
செருக்கு என்பதற்கு கர்வம், ஆணவம்,அகந்தை, திமிர், இறுமாப்பு, தான் என்ற எண்ணம், தலைக்கனம், என பல பொருள் கொள்ளலாம். தன்னை விட பிறரைத் தாழ்ந்தவராகவும், பிறரை விட தன்னை உயர்ந்தவராகவும் கருதுவது. இவ்விடத்திலே செருக்கை மிக எளிதாகப் புரிந்துகொள்ள அண்மையிலே படித்த கதை ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
லால் என்பவர் மிகப் பெரிய சிற்பி. அவர் யாரைச் சிலை வடித்தாலும் அவரைப் போல அந்தச் சிற்பம் வித்தியாசமில்லாமல் இருக்கும். சிறு வேறுபாடு கூட காண முடியாது. இதனால் அவரது புகழ் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது. ஒருநாள் அவர் கனவில் சாவுக் கடவுள் தோன்றினார். அவர், “இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் உன் உயிரை எடுத்துச் செல்லப் போகிறேன்” என்றார். சிற்பி லால் வரப்போகும் சாவிலிருந்து தப்பிப்பது எப்படி? என்று யோசித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது.
தன்னைப் போலவே ஒன்பது சிற்பங்கள் செய்தார். பதினைந்தாம் நாள் வந்தது. அவர் செய்த ஒன்பது சிற்பங்களுக்கிடையே தானும் ஒரு சிற்பம் போல் நின்று கொண்டார். எமதூதர்கள் அங்கு வந்தார்கள். பத்து லால்கள் அங்கு இருந்தனர். உண்மையான லாலைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு சிற்பத்தினருகிலும் சென்று பார்த்தனர். லால் மூச்சை அடக்கி சிற்பம் போலவே நின்றிருந்தார். அவர்களால் உண்மையான லாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் திரும்பிச் சென்று எமனிடம் பத்து லால்கள் இருப்பதையும், உண்மையான லாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொன்னார்கள். எமனும் அங்கு வந்தார். அங்கிருந்த சிற்பங்களுக்கிடையிலிருந்த உண்மையான லாலை அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எமன் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரு வழியைத் தேடினார். அவருக்கும் ஒரு வழி தெரிந்தது. 'லால் நீ செய்த சிற்பங்கள் அருமையாக இருக்கின்றன. இருப்பினும் அதில் ஒரு குறை இருக்கிறது.' என்றார். 'என் சிற்பத்தில் குறையா? இருக்கவே முடியாது' என்றபடி ஒரு அடி முன்னோக்கி வந்தார் லால். 'எமனே என்னுடைய சிற்பத்தில் என்ன குறை கண்டாய்?' என்று கேட்டார். அவரைக் காண்பித்த எமன், 'மற்ற சிற்பத்திற்கெல்லாம் இல்லாத தற்பெருமை, செருக்கு இந்த சிற்பத்திற்கு மட்டும் இருக்கிறது. அதனால் இது உயிரை விடப்போகிறது' என்றார். லால் திறமை அவரைக் காப்பாற்ற முயன்றாலும் அவருடைய செருக்கு அவருக்கு சாவைத் தேடித் தந்தது.

ஒருவருக்கு எப்போது செருக்கு வருகிறது?
ஒருவர் மற்றவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, அவரைவிட நான் உயர்ந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது செருக்கு உருவாகிறது. இவ்வொப்பீடு அழகு, படிப்பு, திறமை, பதவி, அந்தஸ்து என எதுவாகவும் இருக்கலாம். இதே போன்ற ஒப்பீடு இயேசுவின் சீடர்களிடையேயும் இருந்தது. இதனால் வாக்குவாதம் எழுந்தது.
மாற்கு 9: 33-35
அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, 'வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்' என்றார்.

கடவுள் எதற்காக படிப்பை, திறமைகளை மற்றும் செல்வத்தை கொடுக்கிறார்?
நாம் வாழும் சமுதாயத்திற்கு அவை பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் நமக்குத் திறமைகளைக் கொடுக்கிறார். படிப்பும், திறமைகளும் செல்வங்களும், பதவியும் பெருமைக்காகவோ, அகங்காரத்திற்காகவோ அல்லது ஆணவத்திற்காகவோ கொடுக்கப்படவில்லை மாறாக சேவைக்காக, பிறரின் பயன்பாட்டிற்காக, மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவுமே கொடுக்கிறார்.
எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் முடியும், எனக்குத் தெரியாதது இல்லை என்ற மனப்பாங்குதான் செருக்கின் மொத்த உருவம். எல்லாம் தெரிந்த ஒருவர் கடவுள் மட்டும் தான். ஒருவர் தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும்போது தன்னை கடவுளோடு ஒப்பிடுகிறார். கடவுளோடு ஒப்பிடும்போது நாம் எள்ளளவும் தகுதியில்லாதவர்கள் என நம் எல்லாருக்குமே தெரியும். அப்படியானால் எல்லாம் தெரியும் என்ற நம் எண்ணம் முற்றிலும் தவறானது.

ஒரு சிலர், ‘தான் இல்லையென்றால் எதுவுமே நடக்காது’ என்று நினைப்பார்கள். சிலர் அவர் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து விடுப்பு எடுத்துச் சொன்றாலும், அவ்வப்போது கைபேசியில் தொடர்புகொண்டு வருவதை பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். “விடுப்பு எடுத்திருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தொடர்புகொண்டு அவ்வப்போது விசாரிக்கிறீர்கள்?” எனக்கேட்டால், “நான்தான் அங்கு எல்லாமே, நான் இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது” என்று சொல்வதையும் கேட்டிருப்போம். இது “தான் நின்றுவிட்டால், பூமி சுத்தாது” என்பதைப்போன்றது. என்னைப் பொறுத்தவரை இவர்களைப் போன்றவர்களை அந்நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்தால், அந்நிறுவனங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இன்று செருக்கு என்பதும், தன் உயர்வு என்பதும் ஒன்று என்பதைப் போல ஒரு மாயை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே செருக்கு கொள்வது நல்லதா? கெட்டதா? என்ற விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன் கார் உற்பத்தி உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் செய்த விளம்பரம் எனக்கு நினைவுக்கு வருகிறது. I can do it, I must do it, I can only do it.
என்னால் செய்யமுடியும், நான் செய்ய வேண்டும், நான் மட்டுமே செய்ய முடியும். வர்த்தக உலகில், போட்டி நிறைந்த விற்பனைச் சந்தையிலே பிற நிறுவனங்களுடைய உற்பத்தி பொருட்களைப் பின்னுக்குத் தள்ளி, தங்கள் பொருட்களை விற்பதற்கு இது போன்ற விளம்பரங்களை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளை நமது வாழ்க்கைப் பாடத்திற்குப் பயன்படுத்துவது சரியா? என்னால் மட்டும்தான் செய்யமுடியும் என்ற சொற்றொடர் திமிர், செருக்கு, ஆணவம், அகங்காரம் ஆகியவற்றின் மொத்த வெளிப்பாடுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

மருத்துவர்கள் நோயாளிகளிடம் 'எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, “இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய்”. அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய். இவை தாழ்வு மனப்பான்மையுள்ள மனிதர்களுக்கு உளவியலாளர்கள் பயன்படுத்தும் மருந்துகள். நன்றாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்ளும் போது, இது விஷமாக மாறுகிறது. தாழ்வு மனப்பான்மையை நீக்கச் சொல்லப்படும், தன்உயர்வுக் கொள்கைகளை தாழ்வு மனப்பான்மை இல்லாதவர்கள் பயன்படுத்தும்போது அது ஆணவமாக, திமிராக, செருக்காக, தலைக்கணமாக மாறுகிறது.

செருக்கின் விளைவு என்ன?
எல்லாம் இருக்கும் ஒருவர் செருக்குடன் நடந்து கொள்ளும்போது, அவர் தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்லி யாரும் நெருங்க மாட்டார்கள். யாரும் நெருங்காததால் அவர் தனிமைப்படுத்தப்படுவார். இவ்வாறு தனிமைப்படுத்தப்படும்போது, தனக்கு கொடுக்கப்பட்ட கொடைகளைத் தனக்குள் புதைத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது. தாலந்துகள் கொடுக்கப்பட்டும் அவற்றை மண்ணில் புதைத்து வைத்த பயனற்ற ஊழியர்க்கு ஒப்பாகி விடுகிறார்கள். அக்காலத்தில், செருக்குள்ளவர்களுக்கு தாவீதின் அரசிலே இடமில்லை. இக்காலத்தில் செருக்குள்ளவர்களுக்கு, மக்கள் மனதிலும் சரி, இறையாட்சியிலும் சரி, கண்டிப்பாக இடம் கிடையாது.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம், மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில்தான், நாம் நம்மையே உணர்கிறோம். ஆயிரம் திறமைகள் இருந்தாலும் செல்வம் இருந்தாலும் அடுத்தவர்களை மதித்து வாழ்வது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். நம்மைவிட அறிவால் செல்வத்தால், அந்தஸ்தால் குறைந்தவர்கள் என்று நாம் நினைப்பவர்களிடம் கூட நமது அகங்காரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்திவிடக் கூடாது.
ஏனெனில் ஒரு துறையில் நாம் சிறப்பானவர்கள் என்றால், வேறு துறையில் மற்றவர்கள் சிறப்பானவர்கள். அவற்றையெல்லாம் விட, இறைவன் நம்மை திறமைகளால், செல்வங்களால், கல்வியால் நிறைத்திருக்கிறாரென்றால் அது பிறருக்கு அதிகமான பணியாற்றவே என்ற எண்ணம் கொண்டிருந்தாலே நாம் செருக்கு இல்லாதவர்களாக வாழ முடியும்.








All the contents on this site are copyrighted ©.