2012-01-31 15:34:12

கிறிஸ்தவப்பள்ளிகள் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தலத்திருஅவை கவலை


சன.31,2012. காஷ்மீரில் மூன்று கிறிஸ்தவ குருக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்தவப்பள்ளிகளின் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் துவக்கப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரின் கிறிஸ்தவ பள்ளிகள் 20 ஆயிரம் இஸ்லாமியர்களை கிறிஸ்தவ மறைக்கு மாற்றியுள்ளதாக சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதைத் தொடர்ந்து, கிறிஸ்தவப் பள்ளிகளின் மீது இஸ்லாமிய சமுதாயத்தின் பகையுணர்வு அதிகரித்து வருவதாக கிறிஸ்தவ சபைகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பகையுணர்வுகளும் பரப்பப்படுவதால், கிறிஸ்தவர்கள் அச்சத்திலேயே வாழ்வது மட்டுமல்ல, பலர் அம்மாநிலத்திலிருந்து வெளியேறி வருவதையும் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்க வேண்டுமென காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஏறத்தாழ 18 ஆயிரம் கத்தோலிக்கர்களே வாழும் காஷ்மீரில், தலத்திருஅவை ஏறத்தாழ 100 பள்ளிகளை நடத்தி வருகிறது. கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் 99 விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.