2012-01-27 15:45:27

இந்தியா திகார் சிறை கைதிகள் 2,500 பேர் விடுதலை


சன.27,2012. இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு திகார் சிறைக் கைதிகள் 2,500 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் டெல்லியைச் சேர்ந்த 2,500 கைதிகளை, 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. எனினும் தீவிரவாதச் செயல்களுக்காக தண்டனை பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படமாட்டாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள், 2 மாதத்துக்கு முன்கூட்டியும், 5 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் 45 நாட்கள் முன்கூட்டியும், ஒன்று முதல் 5 ஆண்டு வரைத் தண்டனை அனுபவித்தவர்கள் 15 நாட்கள் முன்கூட்டியும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று திகார் சிறை அதிகாரி தெரிவித்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறையான திகார் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது, சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நடத்தையை கருத்தில் கொண்டு, அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.