2012-01-26 15:49:05

குருத்துவ மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை


சன 26, 2012. குருத்துவ மாணவர்களின் இறையியல் கல்வி செப வாழ்வுடன் நெருங்கிய தோழமை கொண்டதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியின் உம்பிரியா, கலாபிரியா மற்றும் கம்பாஞ்ஞா மாநிலங்களில் 1912ம் ஆண்டு துவக்கப்பட்ட குருமடங்கள் தற்போது தங்கள் நூறாமாண்டைக் கொண்டாடி வருவதையொட்டி அவைகளின் அதிபர்களையும் குருமட மாணவர்களையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அப்பகுதிகளின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களைப் பாராட்டியதுடன், இக்குருமடங்களின் வளர்ச்சியில் துவக்க காலத்தில் சிறப்புப் பங்காற்றியுள்ள இயேசு சபையினரின் பணிகளுக்கும் தன் நன்றியை வெளியிட்டார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் இந்த இத்தாலிய மாநிலங்கள் துன்பங்களை அனுபவித்தாலும், தங்களின் ஆன்மீகப் பாரம்பரியங்களிலும் பக்தி முறைகளிலும் உயிர்த்துடிப்புடன் இருப்பது, புதுப்பிக்கப்பட்ட புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் குருமட அதிபர்களிடமும் குருமட மாணவர்களிடமும் முன்வைத்தார் திருத்தந்தை.
தங்கள் வாழ்வில் புனிதத்துவத்தை ஊக்குவிப்பவர்களாகவும் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாகவும் பணிபுரியக்கூடிய நற்செய்திப் பணியாளர்களின் தேவை எக்காலத்தையும் விட தற்போது அதிகம் அதிகமாக உள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.