2012-01-25 16:15:06

புரட்சிக் குழுக்களின் குடியரசு தினப் புறக்கணிப்பு குறித்து திருஅவைத் தலைவர்கள் கவலை


சன.25,2012. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் பிற பகுதிகளோடு நன்றாக ஒருங்கிணைப்பதற்கு மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படுமாறு, அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வியாழனன்று நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு அப்பகுதியின் 12 புரட்சிக் குழுக்கள் அழைப்பு விடுத்திருப்பதை முன்னிட்டு இப்புதனன்று இவ்வாறு இந்திய நடுவண் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.
புரட்சிக் குழுக்களின் இவ்வழைப்புக் குறித்து கருத்து தெரிவித்த, வடகிழக்கு இந்திய அமைதி அவையின் உறுப்பினராகிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில், உடனடித் தீர்வுகளைவிட, உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
மேலும், மியான்மாரிலிருந்து செயல்படும் இந்தியப் புரட்சிக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மியான்மார் அரசு அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுவதும், புரட்சிக் குழுக்களின் குடியரசு தினப் புறக்கணிப்புக்குக் காரணம் என ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, அசாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் சுமார் 700 புரட்சியாளர்கள் இச்செவ்வாயன்று ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.